/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூடுதல் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி போலீசார் திணறல்! தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
/
கூடுதல் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி போலீசார் திணறல்! தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
கூடுதல் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி போலீசார் திணறல்! தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
கூடுதல் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி போலீசார் திணறல்! தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 20, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள், 73 போலீசார் என மொத்தம் 79 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அதிலும் சிலர் எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் போன்ற உயர் அலுவலகங்களில் அயல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, நீதிமன்ற பணி, சம்மன் வழங்குதல், அரசு மருத்துவமனை பாதுகாப்பு, விபத்து சான்று பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு சிலர் சென்று விடுகின்றனர். ஒரு சிலர் விடுமுறையில் செல்கின்றனர்.
பணியில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் தினசரி ஸ்டேஷன் பணிகளை மேற்கொள்ளுதல், கூட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு அளித்தல், ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனுவை விசாரித்தல், இரவு நேர ரோந்து பணி செல்லுதல், குற்ற வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுத்தல், குற்றவாளிகளை அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
மாவட்டமாக தரம் உயர்ந்த பிறகு கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கங்கள் மற்றும் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், விழிப்புணர்வு பேரணி, ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளிலும் கள்ளக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, நகர பகுதி விரிவடைந்து வருகிறது.
மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சட்டம், ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டி உள்ளதால் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனுவை உடனடியாக விசாரித்தல், குற்ற சம்பவங்களை கண்காணித்து குறைக்கவும், ஏற்கனவே நடந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடிக்கவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
எனவே, காவல்துறை உயர் அதிகாரிகள் கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் போலீஸ்ஸ்டேஷனை டவுன் காவல் நிலையமாக மாற்ற வேண்டும். மேலும், கிராம பகுதிகளுக்கென தனியாக தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.