/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மிளகு சாகுபடியில் கல்வராயன் மலை விவசாயிகள்... ஆர்வம்; தோட்டக்கலைத்துறை மூலம் சலுகைகள் கிடைக்குமா?
/
மிளகு சாகுபடியில் கல்வராயன் மலை விவசாயிகள்... ஆர்வம்; தோட்டக்கலைத்துறை மூலம் சலுகைகள் கிடைக்குமா?
மிளகு சாகுபடியில் கல்வராயன் மலை விவசாயிகள்... ஆர்வம்; தோட்டக்கலைத்துறை மூலம் சலுகைகள் கிடைக்குமா?
மிளகு சாகுபடியில் கல்வராயன் மலை விவசாயிகள்... ஆர்வம்; தோட்டக்கலைத்துறை மூலம் சலுகைகள் கிடைக்குமா?
ADDED : மார் 19, 2025 11:54 PM

மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், 1095 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. இது 2 முதல் 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இங்குள்ள மலைவாழ் மக்கள் நெல், மரவள்ளி, வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்கின்றனர். பாரம்பரியமாக தேன் சேகரிப்பு, காடுகளில் இயற்கையாக விளையும் கடுக்காய் மற்றும் மூலிகை ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஆனாலும் இங்குள்ள விவசாயிகள் போதிய வருவாய் இன்றி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில்
உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சில சமூக விரோதிகள் அங்குள்ளவர்களை சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுத்தும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இதுபோன்ற காரணங்களால், பெரும்பாலான மலைவாழ் மக்கள் சமூக முன்னேற்றம் அடையாமல், வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக லாபம் கொடுக்கும் மலைப்பயிர்களை சாகுபடி செய்வதையும், பட்டு மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவற்றில் வருவாய் ஈட்டவும், ஊக்குவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மிளகு சாகுபடியில் ஆர்வம்
இது ஒருபுறம் இருக்க, அரசு சார்பில் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாத நிலையில் அங்குள்ள விவசாயிகள் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிளகு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சராசரியாக, 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைகளில் தரமான மிளகு விளைகிறது. அதற்கேற்ற சூழல் அங்குள்ளதால்,
நன்கு வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
மிளகு விளச்சலை பொருத்தவரை இயற்கையாகப் பெய்யும் மழை நீரே போதுமானது. நாற்று நட்ட, 3ம் ஆண்டில் காய்க்கத் துவங்கி, 6ம் ஆண்டில் அதிக மகசூலை ஈட்டி தருகிறது. நன்கு விளைந்த மிளகை கைகளாலேயே அறுவடை செய்து, 80 டிகிரி வெப்ப நிலையில் கொதி நீரில் மூழ்கவைத்து எடுத்து வெயிலில் உலர்த்தி பதப்படுத்தும் போது கருப்பு நிறத்தில் மாறுகிறது. ஒரு கொடியில் இருந்து ஆண்டுக்கு 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கிறது. ஒரு ஏக்கரில், 200 கொடிகள் வளர்க்கமுடியும். இது நல்ல மகசூலை கொடுக்கும் போது, 600 கிலோ வரை மிளகு உற்பத்தி செய்யமுடியும். ஆண்டுதோறும் பல லட்சங்களை லாபமாக ஈட்டித்தரும் பணம் கொழிக்கும் பயிராக மிளகு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசு நடவடிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கல்வராயன்மலையில் மிளகு சாகுபடிக்கு ஏற்ற சூழல் இருப்பதால் இதனை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க தோட்டக்கலை துறை முன் வரவேண்டும். இதற்கு அரசு விரிவான திட்டத்தை செயல்படுத்தி சாகுபடிக்கு தேவையான ஆலோசனை, சலுகைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதன் மூலம் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மிளகு சாகுபடி விவசாயிகளை பொருளாதார முன்னேற்றமடைய செய்யமுடியும், ' என்றனர்.