/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டாலியன் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்
/
பட்டாலியன் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்
பட்டாலியன் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்
பட்டாலியன் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்
ADDED : நவ 23, 2024 06:44 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர்களை தாக்கிய பட்டாலியன் காவலரை கண்டித்து, நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே வழக்கறிஞர் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இதையொட்டி, கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்.
கச்சிராயபாளையம் சாலையில் சென்ற போது, அதே திசையில் கார் வந்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பட்டாலியன் காவலர் ஸ்ரீராம், கார் செல்ல அனுமதித்துள்ளார்.
கார் செல்வதற்கு ஏன் அனுமதித்தீர்கள், ஊர்வலம் செல்ல இடையூறாக உள்ளது என வழக்கறிஞர்கள் போலீசாரிடம் கேட்டனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பட்டாலியன் காவலர் ஸ்ரீராமுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
உடன் அங்கிருந்த போலீசார், காவலர் ஸ்ரீராமை அருகில் இருந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, பட்டாலியன் காவலரை கண்டித்து, காலை 11:15 மணியளவில் கச்சிராயபாளையம் சாலையில் வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சில நிமிடங்களில் மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு சென்று, காலை 11:40 மணியளவில் சாலையில் அமர்ந்து மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.
கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., தேவராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பட்டாலியன் காவலர் மீது வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் வழக்கறிஞர்கள் மறியலை தொடர்ந்தனர்.
துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து, மதியம் 1:00 மணியளவில் வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டனர்.
ஆனால், ஆயுதப்படை காவலர் ஸ்ரீராம் மீது பதியப்பட்ட வழக்கின் விபரத்தை தெரிவிக்குமாறு கேட்டு, வழக்கறிஞர்கள் சாலையோரமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, நான்கு முனை சந்திப்பு வழியாக கலெக்டர் பிரசாந்த் தனது காரில் சென்றார். இதைப்பார்த்த வழக்கறிஞர்கள் கலெக்டர் காரினை நிறுத்தி, நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். தனது அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்குமாறு கூறி கலெக்டர் பிரசாந்த் அங்கிருந்து புறப்பட்டார்.
தொடர்ந்து, மதியம் 2:00 மணியளவில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.