/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குத்தகைக்கு மீன் வளர்ப்பவர்கள் அடாவடி: அணை, ஏரிகளில் தண்ணீர் திறப்பு
/
குத்தகைக்கு மீன் வளர்ப்பவர்கள் அடாவடி: அணை, ஏரிகளில் தண்ணீர் திறப்பு
குத்தகைக்கு மீன் வளர்ப்பவர்கள் அடாவடி: அணை, ஏரிகளில் தண்ணீர் திறப்பு
குத்தகைக்கு மீன் வளர்ப்பவர்கள் அடாவடி: அணை, ஏரிகளில் தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 21, 2025 04:58 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய 2 அணைகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 212 ஏரிகள், கிராம ஊராட்சி பராமரிப்பில் 381 ஏரிகள் உள்ளன. அணைகள் மற்றும் பரப்பில் பெரிய ஏரிகள், ஆண்டுதோறும் மீன் வளர்ப்புக்கு குத்தகை விடப்படுகின்றன.
தனியார் ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து அவற்றை பிடித்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பொதுப்பணித் துறைக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பருவ மழைக் காலங்களில் நீர் நிலைகள் நிரம்பாமல் வறண்டன.
இதனால் பல ஏரிகளில் மீன் வளர்ப்புக்கு சாதகமான சூழல் இருந்தும் தண்ணீரின்றி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அதேபோல் மீன் வளர்ப்புக்கு குத்தகை எடுப்பவர்கள் நீர் நிலைகளில் சில அத்துமீறல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. மீன் குஞ்சுகள் விட்டு அது தகுந்த அளவு வளர்ந்தவுடன் அதனை எளிதில் பிடிப்பதற்காக அணை மற்றும் ஏரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை திறந்து வெளியேற்றி விரயம் செய்கின்றனர். இதனால் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாகிறது.
மீன் வளர்ப்பவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக அணை மற்றும் ஏரிகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுவதால் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் பாதித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மீன் பிடிகாலம் துவங்குவதால் இதற்காக நீர் நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றாமல் முன்னெச்சரிக்கையாக தடுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

