/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லோக்சபா தேர்தல் கற்றுத் தந்த பாடம்; ரிஷிவந்தியத்தில் தேர்தல் பணி சுறு... சுறு... களமிறங்கினார் தி.மு.க., மாவட்ட செயலாளர்
/
லோக்சபா தேர்தல் கற்றுத் தந்த பாடம்; ரிஷிவந்தியத்தில் தேர்தல் பணி சுறு... சுறு... களமிறங்கினார் தி.மு.க., மாவட்ட செயலாளர்
லோக்சபா தேர்தல் கற்றுத் தந்த பாடம்; ரிஷிவந்தியத்தில் தேர்தல் பணி சுறு... சுறு... களமிறங்கினார் தி.மு.க., மாவட்ட செயலாளர்
லோக்சபா தேர்தல் கற்றுத் தந்த பாடம்; ரிஷிவந்தியத்தில் தேர்தல் பணி சுறு... சுறு... களமிறங்கினார் தி.மு.க., மாவட்ட செயலாளர்
ADDED : அக் 28, 2024 10:39 PM

ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க., விற்கு ஓட்டு குறைந்ததால், கணக்குப் போட்டு தேர்தல் பணியை துவக்கியுள்ளார் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவியது. அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் குமரகுரு நேரடியாக களமிறங்கினார். கள்ளக்குறிச்சி தி.மு.க., மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், தனது ஆதரவாளரான மலையரசனை களம் காண வைத்தார். 53 ஆயிரத்து 784 ஓட்டுகள் அதிகம் பெற்று மலையரசன் வெற்றி பெற்றார். என்றாலும் அதற்கு முந்தைய லோக்சபா தேர்தலில் தி.மு.க., வின் ஓட்டுகள் லட்சக்கணக்கில் குறைந்தது.
மேலும், கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் மட்டும், 30 ஆயிரம் ஓட்டுகள் தி.மு.க., குறைவாக பெற்றது. எனவே தி.மு.க., விற்கு இது முழு அளவில் வெற்றியை கொண்டாட முடியாத நிலை இருந்தது.
வரும் சட்டசபை தேர்தலில் சீட் பெற்றால் ஜெயிப்பது கடினமாகி விடும். எனவே இப்போது முதலே தேர்தல் பணியை துவங்கிட வேண்டும் என களமிறங்கி விட்டார் வசந்தம் கார்த்திகேயன்.
திருக்கோவிலுார் 3 ஒன்றியத்திற்கும் சேர்த்து சந்தைப்பேட்டை புறவழிச் சாலையில் கட்சி அலுவலகத்தை திறந்து இருக்கிறார். அதேபோல் பகண்டை கூட்டு சாலை, மணலுார்பேட்டை என ஆங்காங்கே கட்சி அலுவலகத்தை திறந்து, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் தினசரி கண்டிப்பாக கட்சி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
தனது நேரடி பார்வையில் நியமிக்கப்பட்ட நேர்முக உதவியாளர்கள் ஒன்றியம் முழுதும் சுற்றி, கட்சியினரின் நிறை குறைகளை கேட்டு அறிய வேண்டும். மற்றொரு பி.ஏ.,வுக்கு ஒன்றிய பணிகளை முறையாகப் பிரித்து கொடுத்து கண்காணிக்க வேண்டும். அலுவலகத்துக்கு வரும் கட்சி நிர்வாகிகளின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தகவல் தெரிவித்து அதனை சரி செய்ய வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் சென்று சேராதவர்களுக்கு பெற்றுத்தர தனியாக மாத சம்பளத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு சொந்த செலவில் மாதம் தோறும் பழம், சத்துப் பொருட்கள் வழங்குவது, ஓம் சக்தி மன்றங்களுக்கு கோவிலுக்கு சென்று வர பண உதவி, கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி கவனிப்பு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயுத பூஜைக்கு சீருடை என களைகட்ட தொடங்கி இருக்கிறது ரிஷிவந்தியம் தொகுதி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கிடைத்த பாடம் எதிர்வரும் சட்டசபை தேர்தலை நோக்கி வசந்தம் கார்த்திகேயனை அழைத்துச் சென்றிருக்கிறது. இதுவே தொகுதி முழுக்க சுற்றி சுழன்று வசந்தம் வாசம் செய்ய காரணம் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

