/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்! 829 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
/
லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்! 829 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்! 829 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்! 829 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா
ADDED : ஏப் 18, 2024 04:55 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை(19ம் தேதி) ஓட்டுப்பதிவையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 829 ஓட்டுச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
மாவட்ட நிர்வாகம் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமானது. இதில் 100 சதவீதம் ஓட்டுபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு, தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓட்டுசாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சிகள், ஓட்டுசாவடிகளில் முன்னேற்பாடு பணிகள், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் சின்னம் பொருத்துதல் போன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
நான்கு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 635 இடங்களில் 1,274 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுசாவடிகள் 94, கடந்த தேர்தலில் ஒரே கட்சிக்கு 75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பதிவாகும் (கிரிட்டிக்கல்) ஓட்டுச்சாவடிகள் 4 என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தலின் போது, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கிய மையங்களை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி., பொருத்தப்படுவது வழக்கம். அதன்படி, கள்ளக்குறிச்சி(தனி) சட்டசபை தொகுதியில்18, சங்கராபுரத்தில்15, ரிஷிவந்தியத்தில் 28, உளுந்துார்பேட்டையில் 33 என மாவட்டத்தில் 94 பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் ஒரே சின்னத்திற்கு 75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுக்கள் பதிவாகும் மையங்கள் (கிரிட்டிக்கல்) 4 உள்ளன.
மேலும் கள்ளக்குறிச்சி(தனி) சட்டசபை தொகுதியில் 215, சங்கராபுரம் 195, ரிஷிவந்தியம் 199, உளுந்துார்பேட்டை220 என மொத்தமாக 829 ஓட்டுச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று, ஓட்டுச்சாவடியில் நடைபெறும் நிகழ்வுகளின் நேரடி காட்சிகளை வெப் காஸ்டிங் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஓட்டுசாவடியிலும் ஒரு தலைமை அலுவலர் கீழ் 4 அலுவலர்கள் வீதம் பணிபுரிகின்றனர். நாளை (19ம் தேதி) நடைபெறும் தேர்தலில், மாவட்டத்தில் 1,274 ஓட்டுசாவடிகளில் 5,262 பேர் பணியிலும், அவசரகால தேவைக்கு கூடுதலாக 1,020 பேர் என மொத்தம் 6,514 பேர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தேவையான ஸ்டாம்ப், அரக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசல், நுால்கண்டு, மறைவு அட்டை, பேனா, நோட்டு உள்ளிட்ட அனைத்து உபகரண பொருட்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.,சமய்சிங் மீனா மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் என 1,972 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச் சாவடிகளுக்கு இன்று மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது. எவ்வித அசம்பாவிதம் இன்றி நாளை ஓட்டுப் பதிவுகளை அமைதியான முறையில் நடத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் தீவிர முனைப்புடன் செயல்பட்டுள்ளது.

