சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் நீர் வழித்தடங்கள்... மாயம்:குடியிருப்புகளை மழைநீர் சூழும் அபாயம்
சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் நீர் வழித்தடங்கள்... மாயம்:குடியிருப்புகளை மழைநீர் சூழும் அபாயம்
UPDATED : மே 31, 2026 07:47 PM
ADDED : மே 31, 2026 07:31 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் நீர் வழித்தடங்கள் மாயமாகி வருவதால், நீர்நிலைகள் சுருங்கி, மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் மழை நீரை சேமிக்கும் வகையில் இயல்பாக அமைந்த கண்மாய்கள், ஊருணிகள், குளம், குட்டை போன்றை நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து வருகின்றன. இவற்றிற்கான நீர் வரத்து பாதைகளான ஓடைகளில் மழைக்காலங்களில் நீரோட்டம் இருக்கும். ஓடைகள் வழியாக செல்லும் நீர் கால்வாய் வழியாக அந்தந்த பகுதி குளம், குட்டைகளில் நிரம்பி சுற்றுப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாராமாக விளங்குகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீர் வழித்தடங்கள் தற்போது ரியல் எஸ்டேட், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் என்ற பெயரால் தற்போது மாயமாகி வருகின்றன. சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக பெரும்பாலான கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. சாலையில் கால்வாய் பாலங்களை மட்டுமே காணமுடிகிறது. மேலும் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியின் பெரும்பாலான இடங்களில், கால்வாய்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் அழிந்துபோய் விட்டது.
இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இதனால் நீர் நிலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க நீர் ஓடைகள் பராமரித்து பேணி காப்பது அவசியம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், மழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க முடியாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் நிலைகளின் அருகே 20 முதல் 40 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் தற்போது 300 முதல் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது.
நீர் நிலைக்கு செல்லும் கால்வாய்கள் மாயமாகி போனதால், நீர்நிலைகள் சுருங்கி, மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து மாவட்டத்தில் விவசாய தொழில் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று மாவட்டத்தில் உள்ள ஊருணிகள், குளம், குட்டைகளுக்கு மழைநீர் சேல்ல வழியின்றி கால்வாய்கள் காணாமல் போய் வருவதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிப்படைந்து வருகின்றன.
எனவே மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து வழித்தடங்கள், பாசன வாய்க்கால்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முறையாக கணக்கெடுப்பு நடத்தி, பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
