ADDED : ஏப் 25, 2026 07:55 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் வரவேற்றார். இளநிலை பூச்சியியல் உதவியாளர் சிட்டிபாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி பங்கேற்று மலேரியா காய்ச்சல் குறித்து பேசினர்.
அனாபிளஸ் எனப்படும் பெண் கொசுவின் மூலம் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட நபரை கொசு கடித்து, மற்றவர்களை கடிப்பதால் பரவும். இந்நோயை தடுக்க வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், பாத்திரங்களை மூடி வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.
திறந்தவெளியில் உள்ள உபயோகமற்ற உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள், டயர் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் மெடிக்கல்களில் மருந்து வாங்கி சாப்பிடாமல், அரசு மருத்துவமனை டாக்டரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொசு வலை பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் வீடு தேடி வரும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்சியில் சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், பாலா, மருந்தாளுனர் மணிகண்டன், ராதா, செவிலியர் தேன்மொழி கலந்து கொண்டனர்.
