/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை! மாவட்டத்தில் 562 கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
/
கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை! மாவட்டத்தில் 562 கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை! மாவட்டத்தில் 562 கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை! மாவட்டத்தில் 562 கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
ADDED : ஜூன் 30, 2024 11:41 PM

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேர் பாதிப்புக்குள்ளாகி, 65 பேர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனையில் காவல் துறையினர் மட்டுமின்றி, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் போனதே பலரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. அப்பகுதியின் வருவாய் துறை அலுவலர்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கண்காணித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை தடுத்திருப்பதற்கான வாய்ப்பாக இருந்திருக்கும்.
கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிப்புக்குள்ளான நிலையில், தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் பாதிப்பு வருங்காலங்களில் நடைபெறாத வண்ணம் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., க்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வி.ஏ.ஓ., கண்காணிப்பு குழு தலைவராகவும், கிராம உதவியாளர், ஊராட்சி அளவிலான மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராமத்தின் ரோந்து பணி காவலர், பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிராம பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், பதுக்கி வைத்தல், விற்பனை மற்றும் கடத்தல் செய்வதை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்கள் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் காவல் துறையினர் மூலம் உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், கஞ்சா, குட்கா, பான்மசாலா, மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து காவல் துறையினர் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கலெக்டர் பிரசாந்த் எச்சரித்துள்ளார்.