/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திறந்த வெளியில் மருத்துவக்கழிவு கொட்டும்... அவலம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
திறந்த வெளியில் மருத்துவக்கழிவு கொட்டும்... அவலம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திறந்த வெளியில் மருத்துவக்கழிவு கொட்டும்... அவலம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திறந்த வெளியில் மருத்துவக்கழிவு கொட்டும்... அவலம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மே 15, 2024 01:25 AM

கள்ளக்குறிச்சி:: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை தவிர்த்து, அதனை அழிப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சிறுவங்கூர் கிராமத்தில் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டம் முழுவதுமிருந்தும் 1000க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு கல்லுாரி பேராசிரியர்கள் முதல் பயிற்சி பெறும் மருத்துவர்கள் வரை சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஸ்கேன் உள்ளிட்ட முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் இன்னமும் இயங்க துவங்காத நிலையில், சிகிச்சைக்கு வரும் பலரும் தனியார் மருத்துவமனைகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். அதையும் மீறி இங்கு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் தினமும் இங்கு அதிகளவில் மருத்துவக்கழிவுகள் சேகரமாகி வருகின்றன. இந்த கழிவுகளை, தனித்தனியே சேகரித்து வைத்து, அரசின் கட்டுப்பாடுகளுடன் முறையாக அகற்றி அழிக்காமல் மருத்துவமனை திறந்தவெளியில் மலைபோல் கொட்டி தீவைத்து எரிக்கும் அவல நிலை இருந்து வருகிறது.
மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள், அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும்.
ஆனால், நோய் தொற்று அபாயம் கொண்ட பேண்டேஜ், துணி, பஞ்சு, கை மற்றும் காலுறைகள், அறுவை சிகிச்சையின் போது அகற்றப்படும் உடல் உறுப்புகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கூட முறையாக அகற்றப்படாமல், பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசுகின்றனர். இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. எனவே மாவட்டம் நிர்வாகம் இதில் தலையிட்டு திறந்த வெளியில் மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து, அரசின் வழிகாட்டுதல்படி முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

