ADDED : அக் 07, 2024 11:11 PM

விழிப்புணர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி அறிவுறுத்தல்படி பொது பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புகளை மேம்படுத்தும்வகையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டங்களில், குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் சி.சி.டி.வி., கேமராக்களை அமைக்க வேண்டும்.ஆன்லைன் மோசடிகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் பயன்படுத்துல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ரவுடித்தனம் பற்றிய தகவல் பகிர்வதன்அவசியம் குறித்தும், விளக்கப்பட்டது.
கருத்தரங்கு
கள்ளக்குறிச்சி, மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் தொழில்நுட்ப கல்லுாரியில் மருத்துவ சேவையில் 'இன்டர்நெட் ஆப் திங்க்சின்' பயன்பாடுகள் குறித்த தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு, கல்லுாரி செயலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை இணை பேராசிரியர் புகழேந்தன் தங்கராசு பேசினார்.
கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கணினி மற்றும் பொறியியல் துறை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.
பணிநிறைவு பாராட்டு விழா
சின்னசேலம் துணைமின்நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் ரங்கசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. மின்வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு மாநில தலைவர் அந்தோணி படோவராஜ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மண்டல செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சம்பத்குமார், பொருளாளர்கள் சிகாமணி, கணபதி வாழ்த்தி பேசி, நினைவு பரிசு வழங்கினர். விழாவில் சங்க நிர்வாக செயலாளர் அசோக்குமார், காமதேனு நலத்திட்டம் சந்தோஷ், கிளை பொதுக்குழு உறுப்பினர் நடராஜன்உட்பட பலர் கலந்து கொண்டனர். அழகன் நன்றி கூறினார்.