UPDATED : நவ 16, 2026 08:31 PM
ADDED : நவ 16, 2026 08:26 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன சிறுமியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 14ம் தேதி மாலை, வீட்டில் படிக்காமல் இருந்த சிறுமியை அவரது தாய் கண்டித்தார். இதனால், கோபத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி புறநகர் பஸ் நிலையத்திற்கு சிறுமி சென்றதும், அதன்பிறகு எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இதையடுத்து, சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் சிறுமியின் புகைப்படத்தை வைத்து விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே கோழிப்பாக்கம் கிராமத்தில், மூதாட்டி ஒருவரது வீட்டில் சிறுமி பத்திரமாக இருப்பதாக, போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சென்று, சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர்.
