கலெக்டருக்கு மெசேஜ் விவகாரம் எம்.எல்.ஏ.,வுக்க வலுக்கும் எதிர்ப்பு
கலெக்டருக்கு மெசேஜ் விவகாரம் எம்.எல்.ஏ.,வுக்க வலுக்கும் எதிர்ப்பு
UPDATED : நவ 23, 2026 07:04 PM
ADDED : நவ 23, 2026 07:04 PM
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகராமும், எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்ட சம்பவமும் கசிந்து சமூக வலை தளங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து, த.வெ.க., ஆட்சியில் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். த.வெ.க., மற்றும் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக அரசியல் கட்சியினர் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டினை த.வெ.க., அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் எம்.எல்.ஏ., மீது முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுப்பார் என பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதுபோன்று நடைபெறாததால் பல தரப்பினரையும் அதிருப்தியடையச் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை எடுத்து, டி.ஜி.பி.,யிடம் 7 நாட்களுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. இதற்கான அவகாசமும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பகிர்ந்ததால் கலெக்டர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினார். இச்சம்பவம் தொடர்பாக எவ்வித தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் கலெக்டர் மவுனம் காத்து வருகிறார்.
அதேசமயம், இச்சம்பவத்திலிருந்து பின்வாங்காமல் உறுதியாக இருப்பதுடன், தனது கணவர் ஷேக் அப்துல் ரஹ்மான் மூலம் தலைமைச் செயலருக்கும், மத்திய அரசுக்கும் புகார் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மதுரையில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், அவரது கணவா் புகாா் அளித்தும் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ., மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக கூறி விமர்சித்துள்ளார்.
மேலும், கலெக்டருக்கு தொல்லை கொடுத்தது தொடர்பாக நேர்மையான விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், கலெக்டரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் எம்.எல்.ஏ., ஒருவேளை ஆபாச மெசேஜ் அனுப்பியிருந்தால், அது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கும் சென்று, நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருவதால் எம்.எல்.ஏ., மீதான எதிர்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
