ADDED : ஜூன் 11, 2026 08:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மொபைல்போன் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் நுார்முகமது, 42; சென்னையில் கார் டிரைவராக பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த நுார்முகமது மீண்டும் சென்னைக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறநகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நுார்முகமது காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென நுார்முகமது வைத்திருந்த மொபைல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். உடன் நுார்முகமது அங்கிருந்தவர்கள் உதவியுடன் மொபைல்போன் திருடிய நபரை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் சின்னசேலம் அம்சாகுளத்தை சேர்ந்த சின்னதுரை மகன் பரணிதரன், 20; என்பது தெரிந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் பரணிதரனை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
