ADDED : மே 18, 2025 09:31 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் ஏ.டி.எம்., மையத்தில் முதியவரிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர் மருத்துவமனை ரோட்டில் உள்ள, ஸ்டேட் பாங்க் கீழ்த்தளத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுகிறது. அங்கு பல்லரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், 75; என்பவர், சென்னையில் இருக்கும் தனது மகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த கடந்த, 13ம் தேதி சென்றார்.
அங்கிருந்த நபர் ஒருவர் அவருக்கு உதவி செய்வது போல, நடித்து பணத்தை வேறொரு வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டு மாயமானார்.
ஜெயராமன் வீட்டிற்கு சென்று மகளிடம் கேட்ட போது, பணம் வங்கிக்கணக்கில் சேரவில்லை என தெரிவித்தார். அதற்கு பிறகே அவருக்கு ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
இது குறித்து அவர், திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.