/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்தவர் கைது
/
போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்தவர் கைது
ADDED : பிப் 20, 2025 06:55 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகை அடகு கடைகளில் போலி நகையை அடமானம் வைத்து பணம் பெற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார், வடக்கு வீதியில், உகம்ராஜ், 37; நகை அடகு கடை வைத்துள்ளார். இவர் கடையில் கடந்தாண்டு அக்டோபரில், கொல்லூர் கிராமம், பரணி எனும் பெயரில், 4 கிராம் தங்க நகையை ஒருவர் அடமானம் வைத்து, ரூ.19 ஆயிரம் பணம் பெற்று சென்றார். அந்த நகையை சோதனை செய்த போது, 'போலி' என தெரிந்தது. இது குறித்த புகாரில், திருக்கோவிலுார் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் நேற்று திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் செல்ல, பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, கந்தசாமி நகரை சேர்ந்த மாரீஸ்வரபாண்டியன், 55; எனவும், இதேபோல, 3 கடைகளில் போலி நகை கொடுத்து, பணம் பெற்றதும் தெரிந்தது. விழுப்புரம், மேல் தெருவை சேர்ந்த பொன்னம்பலம் மகன் முருகனிடம், போலி நகைகளை செய்து வாங்கி அடகு வைத்து, இருவரும் பணத்தை பங்கு போட்டுள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.

