/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஞ்சரான வனப்பகுதி சாலைகளால் வாகன ஓட்டிகள்... அவதி; புதுப்பிக்க வனத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பு
/
பஞ்சரான வனப்பகுதி சாலைகளால் வாகன ஓட்டிகள்... அவதி; புதுப்பிக்க வனத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பு
பஞ்சரான வனப்பகுதி சாலைகளால் வாகன ஓட்டிகள்... அவதி; புதுப்பிக்க வனத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பு
பஞ்சரான வனப்பகுதி சாலைகளால் வாகன ஓட்டிகள்... அவதி; புதுப்பிக்க வனத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பு
ADDED : ஆக 02, 2025 06:45 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வனப்பகுதி வழியாக செல்லும் தார்சாலைகளை அகலப்படுத்தி, புதுப்பிக்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அந்தியூர், குன்னியூர் மற்றும் உளுந்துார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிக்காடு, கல்சிறுநாகலுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உதயமாம்பட்டு வழியாக தியாகதுருகத்திற்கு செல்கின்றனர்.
இதில் உதயமாம்பட்டு தரைப்பாலம் முதல் அந்தியூர் வரை 2 கி.மீ., தொலைவிலான தார்சாலை, குன்னியூரில் இருந்து 650 மீட்டர் தொலைவிலான தார் சாலை வனப்பகுதி வழியாக செல்கிறது.
இப்பகுதி தார் சாலை பெயர்ந்து, கரடு முரடாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பெயர்ந்து கிடக்கம் கூர்மையான கருங்கற்கள் பட்டு வாகன டயர்கள் பஞ்சராகி விடுகிறது. அவசர தேவை, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் கூட வேகமாக கொண்டுசெல்ல முடியாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதேபோல், பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து சித்தால் செல்லும் 1 கி.மீ., தொலைவிலான தார்சாலை வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையிலும் பல்வேறு இடங்கள் சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக கிடக்கிறது. கற்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் இந்த சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளானந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 7 கி.மீ., தொலைவிற்கு சுற்றிக்கொண்டு சித்தாலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தொண்டனந்தல் - மையனுார் செல்லும் வழித்தடத்தில் 1.5 கி.மீ., தொலைவிலான தார்சாலை, மேலப்பழங்கூர் வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் 5க்கும் மேற்பட்ட ஆபத்தான வளைவுகளும், ஒரு தாழ்வான பகுதியும் உள்ளது. இந்த பகுதியில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வளைவுப்பகுதியில் விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாமல் நிற்கிறது.
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வனப்பகுதி வழியாக செல்லும் மூன்று தார் சாலைளையும் விரிவுபடுத்தி, புதுப்பிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, வனப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறை மற்றும் அரசு துறைகளின் அனுமதி பெறுவது அவசியம்.
ஆனால், வனப்பகுதியில் சாலை அமைத்தால் அங்குள்ள வனவிலங்குகளின் வாழ்விடங்கள் பாதிக்கும், மண் அரிப்பை ஏற்படுத்தும் உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி சாலை பணிகளை மேற்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமமடைகின்றனர். எனவே, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி சாலைகளை அகலப்படுத்தி, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

