UPDATED : நவ 29, 2026 07:20 PM
ADDED : நவ 29, 2026 07:20 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் புதிய தார்சாலை அமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உளுந்துார்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஏரளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. சென்னை, புதுச்சேரி பகுதியிலிருந்து சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
வாகன பெருக்கம் காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. புறவழிச்சாலை சந்திப்பு மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள், கோவில்கள் உள்ள சில முக்கிய இடங்களில் கிராம மக்கள், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
இதனையொட்டி அதிக விபத்துகள் மற்றும் வாகனங்கள் கடக்ககூடிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மூலம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பல ஆண்டுகளாக வாகன போக்குவரத்து இருந்து வரும் நிலையில், சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் சாலை சேதமடைந்தது. சேதமான இடங்களில் பேட்ச் ஒர்க் நடந்த பகுதியிலும் சற்று மேடாக காணப்படுகிறது.
இதனையொட்டி, உளுந்துார்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் சாலையில் பள்ளம் மேடு, விரிசல்கள், சேதமான பகுதி மற்றும் மேற்பரப்பை இயந்திரம் மூலம் அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
