தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அவசியம்

அவசியம்

அவசியம்


ADDED : செப் 07, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம் – கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம்... போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மக்கள் கோரிக்கை

சின்னசேலம்: சின்னசேலம் – கூகையூர் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம், விருத்தாசலம் இடையே 4 தினசரி ரயில்களும், 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

யஷ்வந்பூர், புதுச்சேரி பகுதிகளுக்கு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, விசாகப்பட்டிணம், ஆந்திரா, துாத்துக்குடி, போன்ற இடங்களிலிருந்து ரேஷன் அரிசி, உரம் போன்றவைகள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு பின், இங்கிருந்து லாரிகள் மூலம் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சின்னசேலம் அடுத்த குரால், தோட்டப்பாடி, காலசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பெத்தாசமுத்திரம், வீரபயங்கரம், கூகையூர், பாக்கம்பாடி, நைனார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சின்னசேலம் கூகையூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கூகையூர் வழியாக பெரம்பலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கபடுகிறது. மேலும் நைனார்பளையம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சின்னசேலம் பகுதியில் இயங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பஸ்களும் சின்னசேலம் – கூகையூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இந்த சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் வழியாக தினமும் பகல் நேரத்தில் 10 ரயில்களும், இரவு நேரத்தில் 4 ரயில்களும் சின்னசேலத்தைக் கடந்து செல்கிறது.

மேலும் பல்வேறு கூட்ஸ் ரயில்களும் சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் தினமும் ஒவ்வொரு முறையும் ரயில்கள் கடந்து செல்லும் போது ரயில்வே கேட் 20 நிமிடங்களுக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் அவசர வேலைகளுக்கு செல்வோர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சின்னசேலத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் கூகையூர் சாலையில் அரசு மருத்தவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு சின்னசேலம் சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரங்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் மருத்துவமனைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக விபத்து மற்றும் கர்ப்பிணி பெண்கள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்பவர்களும் ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது.

இதனால் விபத்துகளில் சிக்கியவர்கள் பிழைக்க வாய்ப்பிருந்தும் ரயில்வே கேட்டில் காத்திருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ள சம்பவல்களும் அரங்கேறியுள்ளது. இதனால் கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது நாள் வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் சின்னசேலம் – கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us