/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது அவசியம்: மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?
/
மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது அவசியம்: மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?
மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது அவசியம்: மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?
மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது அவசியம்: மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?
ADDED : நவ 09, 2024 03:19 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கோடைகாலங்களில் வறட்சி நிலவுவது வழக்கமாக உள்ளது. பல இடங்களில் ஆறு, குளம், ஏரி, கிணறுகளில் தண்ணீர் வற்றி, குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரிந்து, வெகு துாரம் சென்று தண்ணீர் பிடித்து வருவதுமான நிலை ஏற்படுகிறது.
குடிநீர் கேட்டு ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
கோடை காலங்களில் வறட்சி ஏற்பட்டாலும் நிலத்தடி நீர் சேமிப்பால் சமாளிக்க முடியும். ஆனால், நிலத்தடி நீர் சேமிக்க தவறுவதால் ஆண்டுதோறும் குடிநீர் பிரச்னை தலைதுாக்குகிறது.
கள்ளக்குறிச்சி பகுதியில் சாதாரணமாக 200, 300 அடி ஆழத்திற்கு போர்வெல் அமைத்து செழிப்பாக தண்ணீர் கிடைத்து வந்த காலம் மலையேறிப் போய், தற்போது 700, 800 அடி ஆழத்திற்கும் மேல் போர்வெல் அமைத்தால்தான் ஓரளவிற்கு தண்ணீர் கிடைக்கும் எனும் நிலை பெரும்பாலான இடங்களில் இருந்து வருகிறது.
இதுபோன்று நிலத்தடி நீர்மட்டம் குறையத் துவங்கி விவசாயமே பிரதான தொழிலாக உள்ள கள்ளக்குறிச்சி பகுதி விரைவில் விவசாயத்தை விவசாயிகள் மறக்கும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையை மாற்றி பருவமழைக்காலத்தில் கிடைக்கும் மழைநீரை பூமிக்கடியில் சேர்த்து எதிர்காலத்தில் விசவாய பணிகளை பாதிப்பில்லாமல் செய்திடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான முன்னோட்டமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி அரசு அலுவலகங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் கட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டது. இதனால், நல்ல பலனும் கிடைத்தது.
ஆனால், அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்களால் திட்டத்தின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து தற்போது அரசு அலுவலகங்களில் கூட மழைநீர் சேகரிப்பு தொட்டி காணாமல் போனது.
எனவே, நிலத்தடி நீரை காப்பதற்கும், அடுத்த தலைமுறை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை முறையாக சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன் மாவட்ட நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.