/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய ரயில் பாதை திட்ட பணிகள்.. மந்தம்; விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
/
புதிய ரயில் பாதை திட்ட பணிகள்.. மந்தம்; விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
புதிய ரயில் பாதை திட்ட பணிகள்.. மந்தம்; விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
புதிய ரயில் பாதை திட்ட பணிகள்.. மந்தம்; விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 12, 2025 03:35 AM
சின்னசேலம் - கள்ளக்குறிச்சி வரை, 16 கி.மீ., துாரத்திற்கு, மத்திய அரசு நிதி மற்றும் தமிழக அரசின் 50 சதவீத நிதியோடு, புதிய ரயில் பாதை திட்ட பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கியது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேம்பாலம், சிறு பாலங்கள் கட்டும் பணி, 116.6 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது.
கள்ளக்குறிச்சி நகரில் இருந்து பொற்படாக்குறிச்சி வரை 5 கி.மீ., துாரத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், திடீரென கள்ளக்குறிச்சி ரயில் நிலையத்தை மாடூர், நிறைமதி கிராம பகுதிக்கு மாற்ற, கலெக்டர் அலுவலகம் சார்பில், தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு நடத்தி, ஏற்கனவே தேர்வு செய்த கள்ளக்குறிச்சி நகரில், தியாகதுருகம் சாலையில் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை
மேலும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை, உளுந்துார்பேட்டை செல்லும் புதிய ரயில் பாதை திட்ட பணிகள் துவங்க உள்ளதால் திட்டமிட்டபடி, கள்ளக்குறிச்சி நகரில் தான் ரயில் நிலையம் அமைக்கப்படும் என, கடந்த, 2023ம் ஆண்டில் கலெக்டர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினர்.
அதுமட்டுமின்றி, பணிளை விரைந்து முடிக்க விடுபட்டுள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்த, 68.90 கோடி ரூபாய் நிதியை, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரலில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்திலி கிராமம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நகர பகுதி, தியாகதுருகம் சாலையில், தனியார் பெட்ரோல் பங்க் எதிரே ரயில்வே அதிகாரிகள் அளவிட்டு கல் நட்டனர். மேலும், அப்பகுதியில் வணிகர்கள், குடியிருப்பு வாசிகளுக்கு இடத்தை காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இதில் ஒரு சிலர் காலி செய்து வெளியேறினர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதனால் விரைவில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பிறகு, ரயில் பாதை பணிகளில் முன்னேற்றம் இல்லாமல் மந்தமாகி போனது.
இந்த திட்டபணிகள் துவங்கும் போது, கடந்த 2024ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது வரை பணிகள் முழுமை பெறாமல் இழுபறியில் உள்ளது.
ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து முடித்திட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

