ADDED : ஏப் 15, 2025 06:33 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் அரசு ஆதிராவிட நடுநிலைப் பள்ளியில் தாட்கோ திட்டத்தின் கீழ் 1.53 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக 8 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதேப் போன்று, நீலமங்கலம் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் இருளர் இன மக்களுக்காக தொல்குடி திட்டத்தின் கீழ் விருகாவூர் பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 67 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னையில் நடந்த சமத்துவ நாள் விழாவில், இந்த குடியிருப்புகள் மற்றும் புதிய வகுப்பறை கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையொட்டி தென்கீரனுார் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் விருகாவூரில் நரிக்குறவர், இருளர் குடியிருப்பு கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றினார்.
விழாவில், தாட்கோ செயற் பொறியாளர் அன்புசாந்தி, பள்ளி தலைமையாசிரியர் அருள்மணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.