/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள்... அவதி; ஊழியர்கள் பற்றாக்குறையால் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள்... அவதி; ஊழியர்கள் பற்றாக்குறையால் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள்... அவதி; ஊழியர்கள் பற்றாக்குறையால் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள்... அவதி; ஊழியர்கள் பற்றாக்குறையால் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்
ADDED : ஜூலை 17, 2025 12:37 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லுாரி கடந்த 2019 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, சிறுவங்கூரில் கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட துவங்கியது. 700 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில், அவசர சிகிச்சை, முடநீக்கியல், அறுவை, கண் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் இயங்கி வருகிறது. சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியும் உள்ளது.
இக்கல்லுாரி துவங்கியபோது எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இந்தாண்டு படிப்பு முடித்து வெளியே உள்ளனர். அதன்பின்பு, இக் கல்லுாரியில் நெப்ராலஜி, கேஸ்ட்ரோ எண்ட்ரமாலஜி முதுநிலை படிப்புகளுடன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இங்கு நோயாளிகளுக்கு எண்ணிக்கை ஏற்ப போதிய அளவில் பணியாளர்கள் இல்லாததால், அனைத்து பிரிவுகளிலும் நோயாளிகள் பல மணி நேரம் காத்து கிடக்கும் அவல நிலை தொடர்கிறது.
இம்மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், மருத்துவமனை வருவோருக்கு, புறநோயாளிகள் சீட்டு பதிவு செய்ய, 2 கவுண்டர்கள் மட்டுமே உள்ளது. அதிலும் பல நேரம் ஆட்கள் இருப்பது இல்லை.
இதனால் சீட்டு பதிவு செய்யவே குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும். டாக்டர்களை சந்தித்த பின்பு, பரிசோதனைக்கு சி.டி., ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனைகள் எடுக்க சென்றால், அங்கும் ஊழியர்கள் இல்லாததால், வெகு நேரம் நோயாளிகள் காத்து கிடக்கின்றனர்.
மதியம் உணவு கூட எடுத்து கொள்ளாமல் காத்திருந்து எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து திரும்பினால், டாக்டர்கள் இருப்பது கிடையாது. அடுத்த நாள் திரும்பவும் மருத்துவமனை வந்து, பரிசோதனை முடிவுகளை வேறு டாக்டர்களிடம் காண்பித்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
சாதாரண காய்ச்சலுக்கு சென்றால் கூட டாக்டரை சந்தித்து, மருந்து மாத்திரைகள் வாங்க ஒரு நாள் முழுதும் மருத்துவமனை வளாகத்தில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது. அதுபோல் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வரும் மருத்துவமனை வளாகத்தில், போதிய இருக்கைகள் வசதிகள் கூட கிடையாது. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்கள் கும்பல் கும்பலாக மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்திருக்கின்றனர்.
மருந்து வாங்கவும், ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்டவைக்கு பல மணி நேரம் காத்திருக்கும் நேரத்தில், வயது முதிர்ந்த நோயாளிகள் வெகு நேரம் நிற்க முடியாமல் ஆங்காங்கே தரையில் பரிதாபமாக படுத்து கிடக்கின்றனர்.
நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள், அனைத்து பிரிவுகளிலும் போதுமான பணியாளர்களை நியமிப்பதுடன், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.