/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'திடீர்' கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி: அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் தொடர் உயர்வு
/
'திடீர்' கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி: அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் தொடர் உயர்வு
'திடீர்' கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி: அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் தொடர் உயர்வு
'திடீர்' கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி: அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் தொடர் உயர்வு
UPDATED : மே 22, 2025 07:13 AM
ADDED : மே 22, 2025 04:17 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பெய்து வரும் 'திடீர்' கோடை மழை காரணமாக அணைகள், ஏரிகள் உள்ளிட்டவைகளில், நீர்மட்டம் அதிகரித்திருப்பது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளும், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்களும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளன.
கடந்தாண்டு டிசம்பரில் 'பெஞ்சல்' புயலால் பெய்த கனமழையால், பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டின. இந்த நிலையில் நடப்பாண்டு கத்தரி வெயில் தொடங்கும் முன்னரே, வெயில் வாட்ட துவங்கியது.
கடந்த பிப்ரவரியில் இருந்து இம்மாத துவக்கம் வரை பகல் நேரங்களில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். இதனால், நீர்நிலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்தது. ஒரு சில ஏரிகள் முற்றிலுமாக வறண்டன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக திடீரென மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த, 16ம் தேதி 24.46 மி.மீ; 17ம் தேதி 13.96 மி.மீ; 18ம் தேதி 77.79 மி.மீ; 20ம் தேதி 30.48 மி.மீ; அளவு மழை பெய்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மொத்தமாக 146.69 மி.மீ., அளவு மழை பெய்ததால், அணை, ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு, 46 அடி உயரம், 560.96 மில்லியன் கனஅடி ஆகும்.
இதில் கடந்த 18ம் தேதி, 27.70 உயரத்திற்கு, 60.35 மில்லியன் கன அடி வரை மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. திடீரென பெய்த கன மழையால், நேற்று காலை நிலவரப்படி அணையில் 32 அடி உயரத்திற்கு, 179.38 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது. மேலும் அணையில் வினாடிக்கு, 385 கன அடி தண்ணீர் நீர்வரத்து உள்ளது.
அதேபோல், சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவான 36 அடி உயரத்தில் (736.96 மில்லியன் கன அடி) கடந்த 18ம் தேதி 26.70 உயரத்திற்கு (219 மில்லியன் கன அடி) தண்ணீர் இருந்தது.
தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்ட நிலையில், நேற்று காலை நிலவரப்படி 30 அடி உயரம் (355 மில்லியன் கனஅடி) தண்ணீர் இருந்தது.
மேலும், வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. பழைய ெஷட்டரில் தண்ணீர் கசிவு இருப்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் புதிய ெஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பல்லகச்சேரி, சித்தலுார், உடையநாச்சி மற்றும் கூத்தக்குடியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் அதிகரிக்கும். மேலும், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.