/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி; வழிந்தோடும் கழிவுநீரால் உளுந்துார்பேட்டையில் துர்நாற்றம்
/
முழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி; வழிந்தோடும் கழிவுநீரால் உளுந்துார்பேட்டையில் துர்நாற்றம்
முழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி; வழிந்தோடும் கழிவுநீரால் உளுந்துார்பேட்டையில் துர்நாற்றம்
முழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் அவதி; வழிந்தோடும் கழிவுநீரால் உளுந்துார்பேட்டையில் துர்நாற்றம்
ADDED : டிச 22, 2025 05:21 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப் பணியில் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உளுந்துார்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என அப்போதைய எம்.எல்.ஏ., குமரகுரு சட்டசபையில் கோரிக்கை வைத்தார். அதன் பேரில் அப்போதைய முதல்வர் பழனிச்சாமி உளுந்துார்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்படும் என அறிவித்ததோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ரூ. 38.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கி நடந்தன.
இந்த பாதாள சாக்கடை திட்டத்தில், 3.5 கி.மீ., தொலைவிற்கு பைப் லைன் அமைக்கும் பணிகள் நடந்தன. பாதாள சாக்கடை திட்டத்தில், உளுந்துார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், 6 நீர் ஏற்று நிலையங்கள், 2 நீர் உந்து நிலையங்கள் மூலம் சேலம் சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.
அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு கீரனுார் ஏரியில் சுத்திகரித்த தண்ணீர் விடப்படுகிறது. ஆட்சி முடியும் தருவாயில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த 23.2.2021ம் தேதி முதல்வராக இருந்த பழனிச்சாமி காணொலி மூலம் துவக்கி வைத்தார். அதற்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க., ஆட்சிக் காலத்திலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடர்ந்து நடந்தன.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கொண்டு செல்ல பைப்லைன் இணைக்கப்பட்டன. இதில் பெரும்பாலான வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு வீட்டின் உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு பலர் முன் வராததால், நகராட்சி வரி வசூலுடன் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் 2000க்கும் குறைவான வீட்டிற்கு மட்டுமே பைப் லைன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவ. 16ம் தேதி பாதாள சாக்கடை திட்ட கட்டுமான மற்றும் ஓராண்டு பராமரிப்பு பணிக்கான ஒப்பந்த காலம் முடிந்தது. இதனால், பாதாள சாக்கடை பராமரிப்பு பணி உளுந்துார்பேட்டை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்வதற்கான இயந்திரங்கள் உளுந்துார்பேட்டை நகராட்சியிடம் இல்லை. இதனால் தனக்கு ஏன் வம்பு என நினைத்த உளுந்துார்பேட்டை நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை அடைப்புகள் சரிசெய்யும் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தது.
பாதாள சாக்கடை அடைப்பு குறித்த புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் நகராட்சியிடம் சென்றால், தனியாரிடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இதனால் கழிவு நீர் அடைப்புகளை சரிசெய்வதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் நிறுவனமும் அடைப்புகளை உடனடியாக சரிசெய்வது இல்லை. இதனால், உளுந்துார்பேட்டையில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே பாதாள சாக்கடை அடைப்புகளை ஒப்பந்த நிறுவனம் உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

