/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒருநாள் இரவில் உடைமைகளை இழந்த அரகண்டநல்லுார் பகுதி மக்கள்
/
ஒருநாள் இரவில் உடைமைகளை இழந்த அரகண்டநல்லுார் பகுதி மக்கள்
ஒருநாள் இரவில் உடைமைகளை இழந்த அரகண்டநல்லுார் பகுதி மக்கள்
ஒருநாள் இரவில் உடைமைகளை இழந்த அரகண்டநல்லுார் பகுதி மக்கள்
ADDED : டிச 04, 2024 10:30 PM

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார், தேவனுார், மணம்பூண்டியில் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
திருக்கோவிலுாரில் தென்பெண்ணையாறுடன் சங்கமிக்கும் துரிஞ்சலாறு பகுதிகளான மணம்பூண்டி, தேவனுார், அரகண்டநல்லுாரில் பகுதிகளில் 1ம் தேதி இரவு 11:00 மணிக்கு திடீரென கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளத்தால் நள்ளிரவில் அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து, உயிர் பிழைத்தால் போதும் என பொருட்களை அப்படியே விட்டு விட்டு வெளியேறினர்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் மிதந்தன. தொலைத் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு வந்தாலும், அவர்களால் மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை. நேற்று முழுதுமாக வெள்ளம் வடிந்த நிலையில், அதன் கோர தாண்டவத்தைக் காண முடிந்தது.
குறிப்பாக பச்சையம்மன் கோவில் அருகில் இருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த கட்டில், பீரோ என அனைத்தும் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் தடயம் தெரியாத அளவிற்கு காணாமல் போனது. ஆடு, மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாலும், ஒன்றிரண்டு மாடுகள் புதரில் சிக்கி இறந்து கிடந்தன. கார், பைக் என வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு ஆங்காங்கே முட்புதரில் சிக்கிக் கிடந்தன.
சேறும் சகதியுமாக இருக்கும் வீடுகளை எப்படி சுத்தம் செய்வது ஒரு புறம் இருந்தாலும், விலை உயர்ந்த ஏராளமான எலட்ரானிக் பொருட்கள் நாசமானதை காணமுடிந்தது.
ஒரே நாள் இரவில் உணவு, குடிக்க தண்ணீர் இன்றி அனைத்தையும் இழந்து நடுரோட்டிற்கு வந்து விட்டதை தாங்கிக் கொள்ள முடியாத பலரும் நள்ளிரவில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டதை குறை கூறி புலம்பித் தவிக்கின்றனர்.