UPDATED : ஆக 18, 2026 06:11 PM
ADDED : ஆக 18, 2026 06:03 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளது.
இதனால், பல்வவேறு அலுவல் காரணமாக வருபவர்கள் தங்கள் கார்கள், இரு சக்கர வாகனங்களை விதிமுறைகளை மீறி சாலையில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன.
சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அதேபோல் நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம், கச்சிராயபாளையம் சாலையில் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தள்ளுவண்டி மற்றும் நடைபாதை கடை வியாபாரிகள் பலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செல்வோர் மீது பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மோதி உயிரிழிப்பு ஏற்படுகிறது.
எனவே, வாகன போக்குவரத்து மிகுதியான சாலைகளில் சாலையோர நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
