ADDED : செப் 08, 2026 05:11 PM
கள்ளக்குறிச்சி: தேன்குணம் ஊராட்சியில் குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
உளுந்துார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தேன்குணம் ஊராட்சி காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.
எனவே, குடிநீர் பிரச்னைக்குத் நிரந்தர தீர்வு காண வேண்டும். பழுதடைந்த மினி குடிநீர் தொட்டிகள், கைப்பம்புகள், ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார்களை உடனடியாக பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
அனைத்து தெருக்களிலும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுால் மில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள புதர்களை அகற்றி சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
