/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வழக்கறிஞர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு! திருக்கோவிலுாரை பிரிக்க கோரிக்கை
/
வழக்கறிஞர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு! திருக்கோவிலுாரை பிரிக்க கோரிக்கை
வழக்கறிஞர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு! திருக்கோவிலுாரை பிரிக்க கோரிக்கை
வழக்கறிஞர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு! திருக்கோவிலுாரை பிரிக்க கோரிக்கை
ADDED : மார் 07, 2024 11:56 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திருக்கோவிலுாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது வேலுார் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுாரை தலைமை இடமாகக் கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால், அப்போதைய அரசு இதனை நிராகரித்தது. இருப்பினும், திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடனாவது இணைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினார். அதனையும் நிறைவேற்றவில்லை.
கோரிக்கையை வலியுறுத்தி அப்போது வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியது.
இந்நிலையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை என பல்வேறு துறை அலுவலகங்கள் பிரிக்கப்பட்டதால் திருக்கோவிலுாருக்கு அருகாமையில் இருக்கும் பல கிராமத்தினரும் ஆர்.டி.ஓ., அலுவலகம், மின்துறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விழுப்புரம் அலைய வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் சமீபத்தில் நீதித்துறையும் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலுார் நீதிமன்றத்தின் வழக்குகள் எல்லை வரையறை செய்யப்பட்டது.
இதனால், ஏராளமான வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது. இதில், திருக்கோவிலுார் வழக்கறிஞர்களின் பணி பாதித்துள்ளது.
இதன் காரணமாக திருக்கோவிலுாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 10ம் தேதி வரை வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த போஸ்டர் நகர் முழுதும் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

