ADDED : ஜன 24, 2026 07:18 AM

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி - வேளானந்தல் செல்லும் சாலையில் 'கல்வெர்ட்' பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் இருந்து வேளானந்தல் வழியாக தியாகதுருகத்திற்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது.
இதில், பல்லகச்சேரி ஏரியில் இருந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே 'கல்வெர்ட்' அமைக்கப்பட்டுள்ளது.
கல்வெர்ட்டுடன் இணைத்து போடப்பட்ட தார்சாலை சற்று உள் வாங்கியதால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் மோதி நிலை தடுமாறுகின்றன. இரவு நேரத்தில் செல்பவர்கள் திடீரென இருக்கும் பள்ளத்தால் கீழே விழுகின்றனர். குறிப்பாக, பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்கிறது. கல்வெர்ட் ஒட்டியவாறு உள்ள பள்ளத்தை சரிசெய்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
