தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 'ரிங்ரோடு' திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணிக்கு ஆயத்தம்: கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ., - கலெக்டர் ஆய்வு

'ரிங்ரோடு' திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணிக்கு ஆயத்தம்: கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ., - கலெக்டர் ஆய்வு

'ரிங்ரோடு' திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணிக்கு ஆயத்தம்: கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ., - கலெக்டர் ஆய்வு


UPDATED : ஜூன் 12, 2026 11:44 AM

ADDED : ஜூன் 11, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2026 11:44 AM ADDED : ஜூன் 11, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 'ரிங்ரோடு' அமைக்க நிலம் எடுப்புக்கான தொடக்கப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ., - கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், சார் பதிவாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம், உழவர் சந்தை, பெரிய அளவிலான நகை மற்றும் துணிக் கடைகள் அருகருகே உள்ளன. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் தினமும் கள்ளக்குறிச்சி நகர பகுதிக்கு வருகின்றனர்.

நகர பகுதியில் உள்ள பிரதான சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாது. இதனால் மாவட்டத்தின் தலைநகராக உள்ள கள்ளக்குறிச்சியில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் ஏராளமான பொதுமக்கள் கள்ளக்குறிச்சிக்கு வருவதால் வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணி வகுத்து நிற்கும். இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக, சங்கராபுரம் மார்க்கத்தில் இருந்து தியாகதுருகம், உளுந்துார்பேட்டை மார்க்கத்திற்கு செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நான்குமுனை சந்திப்பில் திரும்பாமல் அண்ணாநகர், ஏமப்பேர் வழியாக புறவழிச்சாலைக்கு சென்று, அங்கிருந்து தியாகதுருகம் மார்க்கத்திற்கு செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

அதேபோல், தனியார் பள்ளிகள் ஒரே நேரத்தில் முடிவடைவதால் அனைத்து பள்ளி பஸ்களும் ஒரே நேரத்தில் சென்றது. இதற்கு மாறாக, ஒவ்வொரு பள்ளியும் 10 நிமிடங்கள் இடைவெளியில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், நான்குமுனை சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் போதிய அளவு பலனளிக்காததால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒரே தீர்வு 'ரிங்ரோடு' அமைப்பது மட்டும்தான் என்பதால் பலதரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் 'ரிங்ரோடு' அமைக்கப்படும் என பிரதான கட்சிகள் வாக்குறுதி அளித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 'ரிங்ரோடு' திட்டத்தின் நில எடுப்பு பணிகளுக்காக 70.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், 'ரிங்ரோடு' தியாகதுருகம் சாலையில் உள்ள வீரசோழபுரம் பகுதியில் துவங்கி பெருவங்கூர், தண்டலை, சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி, சங்கராபுரம் சாலை ரோடுமாமந்துார் பகுதியில் இணைகிறது. அதேபோல், ரோடு மாமாந்துாரில் இருந்து மோ.வன்னஞ்சூர், சடையம்பட்டு கிராம எல்லையில் உள்ள அரசு கலை கல்லுாரி வழியாக கச்சிராயபாளையம் சாலையில் காரனுார் பகுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து காரனுார், தச்சூர் வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைத்து, பொற்படாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மீண்டும் வீரசோழபுரம் பகுதியில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 'ரிங்ரோடு' அமைக்கும் பணி 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக கச்சிராயபாளையத்தில் தொடங்கி வீரசோழபுரம் புறவழிச்சாலை வரை 13.914 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 39.53 எக்டர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிங்ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தொடக்கப் பணிகள் குறித்து அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் பத்மஜா ஆகியோர் ரோடுமாமந்துார், சிறுவங்கூர், பெருவங்கூர், தண்டலை, வி.பாளையம் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட சாலை, ஊராட்சிக்குட்பட்ட சாலை, நிலம் கையகப்படுத்தும் சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து கேட்டறியப்பட்டது. அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் நாகராஜன், கோதை ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us