/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையத்திற்கான ஆயத்த பணிகள்... துவக்கம்: ரூ. 22.20 கோடியில் 'பி' கிளாஸ் பஸ் நிலையம் அமைய உள்ளது
/
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையத்திற்கான ஆயத்த பணிகள்... துவக்கம்: ரூ. 22.20 கோடியில் 'பி' கிளாஸ் பஸ் நிலையம் அமைய உள்ளது
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையத்திற்கான ஆயத்த பணிகள்... துவக்கம்: ரூ. 22.20 கோடியில் 'பி' கிளாஸ் பஸ் நிலையம் அமைய உள்ளது
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையத்திற்கான ஆயத்த பணிகள்... துவக்கம்: ரூ. 22.20 கோடியில் 'பி' கிளாஸ் பஸ் நிலையம் அமைய உள்ளது
ADDED : செப் 19, 2025 03:22 AM

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் ரூ. 22.20 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் 'பி' கிளாஸ் புதிய பஸ் நிலையம் அமைகிறது. திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள பஸ் நிலையத்தில் நுாற்றுக்கணக்கான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பெரும்பாலான பஸ்கள் புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடுவதால், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதன் காரணமாக தற்பொழுது உள்ள பஸ் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் தனிநபர்களிடமிருந்து ஐந்து ஏக்கர் நிலம் பஸ் நிலையத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.
இந்த இடத்திற்கு சென்று வருவதற்கு வழி இல்லை என்ற காரணத்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஏற்கனவே நகராட்சிக்காக வழங்கப்பட்ட ஐந்து ஏக்கர் இடத்தை பஸ் நிலையம் அமைப்பதற்கு ஏற்ற வகையில் 3.60 கோடி ரூபாய்க்கு நிலப்பரிவர்த்தனை, நில எடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 11ம் தேதி கட்டுமானத்திற்கான பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங்க உள்ளன.
பஸ் நிலையத்திற்கு சென்றுவர 60 அடி அகல சாலை நீங்களாக பஸ் நிலையம் மட்டும் 4.79 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 16 பஸ்கள் நிற்பதற்கும், 20 பஸ்கள் சென்று வரவும், சைவ, அசைவ உணவகங்கள், பயணிகள் ஓய்வு அறை, பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், கடைகள், பூங்கா என 'பி' கிளாஸ் தரத்தில் பஸ் நிலையம் அமைய உள்ளது.
கட்டுமான பணிக்கான ஆயத்த நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், ஒப்பந்த காலம் ஓர் ஆண்டாக இருந்தாலும், ஆறு மாதத்தில் பணிகள் நிறைவடையும் என பொறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் பல கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை கட்டிய சி & சி கன்ஸ்ட்ரக் ஷன் இப்பணியை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் தான் திருக்கோவிலூர் புறவழிச்சாலை உள்ளது. எனவே பஸ் நிலையத்திலிருந்து புறவழிச் சாலைக்கு செல்ல நெடுஞ்சாலைத்துறை சாலை வசதியை ஏற்படுத்துவதன் மூலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருச்சி மார்க்கமாக செல்லும் பாஸ்கள் அனைத்தும் புறவழிச் சாலை வழியாக வந்து சென்றுவிடும்.
இதனால் திருக்கோவிலூர் நகரில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவடைவதற்குள் புறவழிச் சாலை இணைப்பு திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணிகளை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே, ஒட்டு மொத்த பொது மக்களின் கோரிக்கையாகும்.