/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெப்பக்குளம் பாதாள கால்வாய் பணியில் சிக்கல்: நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்படுமா
/
தெப்பக்குளம் பாதாள கால்வாய் பணியில் சிக்கல்: நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்படுமா
தெப்பக்குளம் பாதாள கால்வாய் பணியில் சிக்கல்: நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்படுமா
தெப்பக்குளம் பாதாள கால்வாய் பணியில் சிக்கல்: நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்படுமா
ADDED : நவ 14, 2024 06:14 AM

திருக்கோவிலுார் புராதான நகரம். நகரின் நீர் மேலாண்மையை பாதுகாக்கும் வகையில் மன்னர் ஆட்சி காலத்தில் தீர்த்த குளம், தெப்பக்குளத்தை ஏற்படுத்தினர்.
குறிப்பாக நகரின் மையப் பகுதியில் இருக்கும் இக்குளங்கள் எப்பொழுதும் நீர் நிறைந்திருக்கும். பல ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டாலும், குடிநீர் பிரச்னை வராத அளவிற்கு நகரில் எப்பொழுதும் நீர்மட்டம் உயர்ந்தே இருக்கும்.
ஆனால் இந்த கட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சீரழிக்கப்பட்டு விட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா புராதன நகரமாக அறிவித்து, தெப்பக்குளத்தை சீரமைத்து, குளத்திற்கு வரும் பாதாள கால்வாயை செப்பனிட நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால் ஒப்பந்ததாரர்கள் குளத்தில் இருந்த மண்ணை சுரண்டிவிட்டு கிளம்பி விட்டனர். குளமும் பாழ்பட்டு போனது, பாதாள கால்வாயும் பழுது பார்க்க வில்லை.
இதன் காரணமாக தெப்பக்குளம் புதர் மண்டி, நீராழி மண்டபம் சிதிலமடைந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. குளத்தை சீரமைக்க கோரி பெருமாள் கோவில் பக்தர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இடம்பெற்றது.
வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், குளம் சீரமைத்து, ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கப்பட்டது.
இங்குதான் சிக்கலே துவங்கியது. திட்ட வரைவில் ஏற்கனவே உள்ள பாதாள கால்வாயை துார் வாருவதற்கு பதிலாக புதிதாக மார்க்கெட் வீதி வழியாக குழாய் புதைக்கப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் ஏற்புடையதாக இருக்காது, தோல்வியிலேயே முடியும் என்பது அனுபவம் வாய்ந்த பொறியாளர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால் என்ன காரணத்தினாலோ புதிய வழித்தடத்தில் பைப்லைன் புதைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி ஒரு சில மீட்டர் துாரத்திற்கு பைப் லைன் புதைக்கப்பட்ட நிலையில் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அந்தத் தெருவே பள்ளமும், படுகுழியுமாகி, லேசான மழைக்கே சேறும் சகதியுமாக, அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இனி மழைக்காலம் என்பதால், மழை நீர் குளத்தில் தேங்கும். இதனை காரணம் காட்டி குளத்தில் நீராழி மண்டபம் கட்டுவது உள்ளிட்ட எந்த பணியும் செய்ய முடியாத சூழல் தான் ஏற்பட்டுள்ளது. திட்டத்தை செம்மையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பழைய பாதாள கால்வாயை, நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை கண்டறிந்து, துார்வாரி, எளிய முறையில் சீரமைத்து, செலவுகளை மிச்சப்படுத்தி, குளத்தில் மேற்கொள்ள வேண்டிய எஞ்சிய பணிகளையாவது செய்து முடிக்கலாம்.
புதிய வழித்தடத்தில்தான் தண்ணீர் கொண்டு செல்வோம் என்றால் அது தோல்வியையே தழுவும், குளமும் சீரடையாது.
இந்து சமய அறநிலையத்துறை இனியாவது விழித்துக் கொள்ளுமா? தேர்தல் வாக்குறுதி அளித்த அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கவேண்டும்.

