ADDED : ஜூன் 06, 2026 08:45 AM

சங்கராபுரம்: சேஷசமுத்திரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மொபைல் டவரில் ஏறி இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் 14 சென்ட் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வருவதாக புகார் எழுந்தது.
கிராமத்தில் பொது நுாலகம் இல்லாததால் தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தில் நுாலகம் கட்ட கிராம மக்கள் தீர்மானித்தனர். மேலும், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கராபுரம் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த 4 இளைஞர்கள், நேற்று காலை 12:00 மணிக்கு அங்குள்ள மொபைல் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இவர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் கீழே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன், தாசில்தார் வைரக்கண்ணன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போராட்டம் நடத்திவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே கீழே இறங்குவதாக இளைஞர்கள் கூறினர்.
சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தை பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் இரவு 7:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
