/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உதவித்தொகை உயர்த்தக்கோரி மறியல் : 156 மாற்றுத்திறனாளிகள் கைது
/
உதவித்தொகை உயர்த்தக்கோரி மறியல் : 156 மாற்றுத்திறனாளிகள் கைது
உதவித்தொகை உயர்த்தக்கோரி மறியல் : 156 மாற்றுத்திறனாளிகள் கைது
உதவித்தொகை உயர்த்தக்கோரி மறியல் : 156 மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : நவ 12, 2025 06:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 156 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு சாதாரண மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,500, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்குகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, டில்லி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் உயர்த்தப்படவில்லை.
தற்போதுள்ள விலைவாசி அடிப்படையில் இந்த உதவித்தொகை போதுமானதாக இல்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று மதியம் 12.15 மணிக்கு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மண்டல செயலாளர் செல்வம், மண்டல தலைவர் வேலு, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
10 நிமிடத்திற்கு மேலாக முற்றுகையில் ஈடுபட்டதால், மற்ற நபர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முடியவில்லை. அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில், முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
பின்னர் மதியம் 1.50 மணியளவில் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 98 பெண்கள் உட்பட 156 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

