/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியார் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி! நீண்ட நாட்களுக்கு பின் வனத்துறை தடை நீக்கம்
/
பெரியார் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி! நீண்ட நாட்களுக்கு பின் வனத்துறை தடை நீக்கம்
பெரியார் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி! நீண்ட நாட்களுக்கு பின் வனத்துறை தடை நீக்கம்
பெரியார் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி! நீண்ட நாட்களுக்கு பின் வனத்துறை தடை நீக்கம்
ADDED : ஆக 13, 2024 10:38 PM

கச்சிராயபாளையம் : பெரியார் நீர் வீழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்வராயன் மலையில் பெரியார், மேகம், கவியம், சிறுகளூர், எட்டியாறு உட்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுார் அருகில் அமைந்துள்ள படகு இல்லம், சிறுவர் பூங்கா மற்றும் மூங்கில் குடில்கள் போன்றவைகளும் உள்ளன.
இதனை காண வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கல்வராயன் மலைக்கு வருவர். மேகம், கவியம் போன்ற நீர் வீழ்ச்சிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அந்த அருவிகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல் உள்ளது. பெரியார் நீர் வீழ்ச்சி மட்டுமே சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எளிதில் சென்று குளிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது.
கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரியார் வீழ்ச்சிக்கே அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் அமைக்கப்பட்ட தரை தளம் அடித்து செல்லப்பட்டது.
கம்பிகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் பெரியார் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதித்திருந்தனர். அதனை மீறுபவர்கள் மீது வனத்துறை சட்டம் பாயும் எனவும் எச்சரித்திருந்தனர். இதனால் கல்வராயன் மலைக்கு சுற்றுலா வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதனை தொடர்ந்து வனத்துறை சார்பில் பெரியார் நீர்வீழ்ச்சியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சேதமடைந்த தரை தளம் சீரமைக்கப்பட்டதுடன், கைப்பிடி கம்பிகளும் பொருத்தப்பட்டது.
தற்போது கல்வராயன் மலையில் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்து குளிப்பதற்கு ஏதுவான சூழல் உருவாகியுள்ளது. மேலும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பபட்டு, பெரியார் நீர் வீழ்ச்சியில் பொது மக்கள் குளிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளனர்.
பல மாதங்களுக்கு பிறகு பெரியார் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.