/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் பாதிப்பு... அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
/
ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் பாதிப்பு... அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் பாதிப்பு... அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் பாதிப்பு... அதிகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஆக 07, 2025 11:56 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து வருவது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.
இதில், வாட்ஸ் ஆப், பேஸ்புக், திரெட்ஸ், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூ டியூப் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு செயலிகள் மற்றும் விளையாட்டு செயலிகளை டவுன்லோடு செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்த செயலிகளை பயன்படுத்தும்போது, விளையாட்டு மூலம் பணம் சம்பாதிப்பது. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தங்களுக்கு தெரிந்தவரை பணம் செலுத்தி சேர்ப்பது மூலம் பணம் சம்பாதிப்பது. ஆன்லைன் மூலம் டைப்பிங் உட்பட பல்வேறு பணிகளை செய்து சம்பாதிப்பது என்பது தொடர்பான விளம்பரங்கள் வருகிறது.
இதை பார்த்ததும் சிலர் சம்மந்தப்பட்ட செயலியை டவுன்லோடு செய்கின்றனர்.
இதில் பல்வேறு செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருக்காது. அவ்வாறு அங்கீகரிக்கபடாத, பாதுகாப்பற்ற செயலிகளை, ப்ரவுசர் மூலம் பதிவிறக்கம் செய்கின்றனர்.
செயலிகளை இன்ஸ்டால் செய்யும் முன் அதில் கூறப்படும் விதிமுறைகளை முழுமையாக படிக்காமல், அனைத்திற்கும் அக்சப்ட் அளிப்பதுடன், வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட விபரங்களையும் பதிவிடுகின்றனர்.
இதன் மூலம் பொதுமக்களின் போனில் உள்ள புகைப்படம், வீடியோ, தொடர்பு எண், சமூக வலைதள விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மோசடி கும்பல் சேகரிக்கிறது. சிறிது நேரம் கழித்து அவர்களது வங்கி கணக்கில், 1,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணமும் கடனாக கிடைத்து விடுகிறது. தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு கடன் வழங்கிய செயலி நிறுவனத்தில் இருந்து மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, வாங்கிய கடன் தொகையை விட பல மடக்கு தொகையை திருப்பி செலுத்துமாறு தெரிவிக்கின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சில நிமிடங்களிலேயே அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் வருகிறது.
தொடர்ந்து மீண்டும் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, மார்பிங் புகைப்படங்களை உங்களது நண்பர்கள், சமூக வலைதளங்களில் பகிருவோம், அவ்வாறு செய்யாமல் இருக்க பணத்தை தாருங்கள் என மிரட்டுகின்றனர்.
இந்த மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் வேறு வழியின்றி மர்ம நபர்கள் கேட்கும் பணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்துகின்றனர். மார்பிங் புகைப்படங்கள் இருப்பதால் வெளியில் தெரிவிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பெண்கள் பலர் ஆன்லைன் செயலியில் கூறப்படும் பணிகளை செய்தால் சம்பாரிக்க முடியும் என்ற ஆசையில் அதை பயன்படுத்த துவங்குகின்றனர். அதற்கு முன்னதாக மர்மநபர்கள் கேட்கும் தொகையை ஆன்லைன் மூலமாகவே செலுத்துகின்றனர்.
அதில் உள்ள பணிகளை செய்து முடித்தாலும் பணம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்ததை தாமதமாக உணருகின்றனர். இது போன்ற மோசடிகளில் சிக்குபவர்கள் சைபர் கிரைமில் புகார் அளிக்க தயங்குகின்றனர்.
எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் கடன் அளிக்கும் மற்றும் பணம் சம்பாதிக்கும் விளம்பரங்கள், ஆன்லைன் மோசடி கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொதுமக்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.