தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கச்சிராயபாளையம் பகுதியில் இந்தாண்டு சம்பா சாகுபடி...கேள்விக்குறி: கோமுகி அணை வறண்டுள்ளதால் விவசாயிகள் கவலை

கச்சிராயபாளையம் பகுதியில் இந்தாண்டு சம்பா சாகுபடி...கேள்விக்குறி: கோமுகி அணை வறண்டுள்ளதால் விவசாயிகள் கவலை

கச்சிராயபாளையம் பகுதியில் இந்தாண்டு சம்பா சாகுபடி...கேள்விக்குறி: கோமுகி அணை வறண்டுள்ளதால் விவசாயிகள் கவலை


UPDATED : செப் 02, 2026 02:27 AM

ADDED : செப் 01, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 02:27 AM ADDED : செப் 01, 2026 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளதால் கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து கவலை அடைந்துள்ளனர்.

கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களுமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழில்களையே நம்பி உள்ளனர். இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காசோளம், வாழை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதரமாக கல்வராயன்மலையின் அடிவராத்தில் அமைந்துள்ள கோமுகி அணை உள்ளது. கோமுகி அணையின் நீர் பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் முழுவதும் கோமுகி அணையில் சேகரமாகிறது.

அணையின் சேகரமாகும் நீரானது பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை 12 அணை கட்டுகள் உள்ளன. இந்த அணை கட்டுகள் மூலம் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீராதாரம் பெற்று 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் கோமுகி அணையின் புதிய பாசன திட்டத்தில், அணையிலிருந்து 8 ஆயிரத்தி 917 மீட்டர் துாரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய்கள் மூலம் கச்சிராயபாளையம், வடக்கனந்தல், மாத்துார், மண்மலை, கரடிசித்துார், தாவடிப்பட்டு, செல்லம்பட்டு, மாதவச்சேரி, சிவகங்கை உட்பட 15 க்கும் மேற்பட்ட கிராமலங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. கச்சிராயபாளையம் பகுதியில் கிணற்று பாசன விவசாயிகள் சம்பா, ஆனிகார், மாசிகார் என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

கிணறு இல்லாத விவசாயிகள் பலர் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு போகம், சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை 5 மாதங்களுக்கு சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. புதிய பாசன கால்வாய் திட்டத்தில் ஒரு மெயின் கால்வாய் மற்றும் 3 கிளை கால்வாய்கள் மூலம் 15 க்கும் மேற்பட்ட கிரமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு குறைந்த அளவே பருவ மழை பெய்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது காலதாமதம் ஏற்பட்டது. கோமுகி நிரம்ப தாமதம் ஏற்பட்டதால் சம்பா சாகுபடி பருவம் துவங்கி 1 மாதத்திற்கு பின்பு கடந்த ஆண்டு நவம்பர் 7 ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாததால் சம்பா பருவம் முடியும் முன்பே சம்பா சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கோடை காலம் துவங்கிய நிலையில் கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலையில் கடும் வறட்சி நிலவியது. இதனால் கோமுகி அணையின் நீர் மட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வற்ற துவங்கியது. தொடர்ந்து நிலவிய வறட்சி காரணமாக கோமுகி அணையில் சொட்டு தண்ணீர் இன்றி வற்றிய நிலையில் காணப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோமுகி அணை இது போன்று தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் கடந்த மாதங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்த நிலையிலும் கோமுகி அணைக்கு நீர் வரத்து ஏற்படவில்லை.

தொடர்ந்து கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் மழை பொழிவு இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சம்பா சாகுபடி தண்ணீர் திறப்பதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் கோமுகி அணை வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் கச்சிராயபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த ஆண்டின் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் , கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வடகிழக்கு பருவ மழையை நம்பி காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us