/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழையால் தடுப்பணைகள் நிரம்பியும் ஏரிகள் நிரம்பவில்லை! ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கவலை
/
மழையால் தடுப்பணைகள் நிரம்பியும் ஏரிகள் நிரம்பவில்லை! ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கவலை
மழையால் தடுப்பணைகள் நிரம்பியும் ஏரிகள் நிரம்பவில்லை! ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கவலை
மழையால் தடுப்பணைகள் நிரம்பியும் ஏரிகள் நிரம்பவில்லை! ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கவலை
ADDED : அக் 28, 2025 05:55 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பிய போதிலும், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 715 ஏரிகளில் 212 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றவை அந்தந் த கிராம ஊராட்சிகளில் பராமரிப்பில் உள்ளது. முக்கிய நீர் ஆதாரமான கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் விவசாயம் செழிக்க காரணமாக உள்ளது.
மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கோமுகி, மணிமுத்தா ஆறுகளின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதோடு அருகிலுள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் அங்கிருந்து ஆயக்கட்டு பாசன நிலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
கோமுகி ஆற்றின் குறுக்கே ஏர்வாய்பட்டினம், சோமண்டர்குடி, மோ.வண்ணஞ்சூர், கள்ளக்குறிச்சி, குரூர், விருகாவூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. மணிமுத்தா ஆற்றில் சூ. பாலப்பட்டு, வடபூண்டி, கண்டாச்சிமங்கலம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து அருகில் உள்ள ஏரிகளுக்கு நீர் கட்டமைப்பு மூலம் தண்ணீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தடுப்பணைகள் நிரம்பி இங்கிருந்து அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
இதில் பெரும்பாலான கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி துார்ந்து போய் உள்ளது. மேலும் பல இடங்களில் கால்வாயில் முட்செடிகள் வளர்ந்து, கரைகள் சேதம் அடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
சூ.பாலப்பட்டு அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பல்லகச்சேரி ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், கன மழை பெய்தும் நிரம்பாமல் உள்ளது. இதன் காரணமாக ஏரியின் பெரும் பகுதியை சிலர் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆதங்கத்தில் உள்ளனர். விருகவூர் தடுப்பனையிலிருந்து நாகலுார் ஏரிக்கு செல்லும் மதகின் தடுப்புகள் சேதமடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் பெரும்பாலான தடுப்பனையிலிருந்து அருகிலுள்ள ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகளை கவலையடைந்துள்ளனர்.
கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக கோமுகி அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. மணிமுக்தா அணையின் ஷட்டர் சேதம் காரணமாக அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேறியது. இதன் காரணமாக இரு ஆறுகளிலும் உள்ள அனைத்து தடுப்பணைகளும் முழுவதும் நிரம்பி வழிகிறது. இத்தருணத்தில் இதன் மூலம் நீர்வரத்து பெறும் ஏரிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் நிரம்பவில்லை.இதனால் ஏரிகள் மூலம் ஆயக்கட்டு பாசன வசதி பெரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய ஜீவாதாரமாக உள்ள விவசாயத்திற்கு முக்கிய தேவையான தண்ணீரை தடுப்பணைகளில் இருந்து பெறும் வகையில் நீர் கட்டமைப்பை சீரமைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கான விரிவான திட்டத்தை நிறைவேற்றி மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து பயனுள்ள வகையில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -

