/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூன் 15, 2025 10:42 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் முன்னிலை வகித்தார்.
கடந்த கல்வியாண்டில் நடந்த பொதுத்தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதனால் மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னடைவை சந்தித்தது.
இதையொட்டி, நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம், வணிகவியல் மற்றும் வரலாறு பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
கூட்டத்தில், சி.இ.ஓ., கார்த்திகா பேசுகையில், 'மாணவர்கள் நுாறு சதவீதம் பள்ளிக்கு வர வைப்பது ஆசிரியர்களின் கடமை. சிறப்பு வகுப்புகள் நடத்தி அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். மாணவர்கள் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், பள்ளி துணை ஆய்வாளர் வேல்முருகன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு கணிதம் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.