/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2 ஆண்டுக்கு முன் ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கியும் மெத்தனம் ! எஸ்.பி., அலுவலகத்திற்கு இடம் தேர்வு எப்போது
/
2 ஆண்டுக்கு முன் ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கியும் மெத்தனம் ! எஸ்.பி., அலுவலகத்திற்கு இடம் தேர்வு எப்போது
2 ஆண்டுக்கு முன் ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கியும் மெத்தனம் ! எஸ்.பி., அலுவலகத்திற்கு இடம் தேர்வு எப்போது
2 ஆண்டுக்கு முன் ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கியும் மெத்தனம் ! எஸ்.பி., அலுவலகத்திற்கு இடம் தேர்வு எப்போது
ADDED : மார் 04, 2024 12:11 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்ட 12.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதிகாரிகளின் மெத்தனத்தால் இடம் தேர்வு செய்யாததால் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி உதயமானது. மாவட்டம் துவங்குவதற்கு முன்பாக நவம்பர் 18ம் தேதி கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்தது.
தற்போது மாவட்டத்தின் 6வது எஸ்.பி.,யாக சமய்சிங் மீனா பணிபுரிந்து வருகிறார்.
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 3 அனைத்து மகளிர் காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையம், 3 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களைக் கொண்டுள்ளது.
எஸ்.பி., தலைமையின் கீழ் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், 86 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 1,398 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
அதேபோல் எஸ்.பி., அலுவலகத்தில், இயங்கக்கூடிய தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், விரல் ரேகை பிரிவு கூடம், தடயம் சேகரிப்பு, தொழில் நுட்ப பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக தச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரியில் வாடகை கட்டடத்தில் எஸ்.பி., அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் நிரந்தரமாக எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 12 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இடம் தேர்வு செய்ப்படாததால் இதுவரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இதேபோன்று, வீரசோழபுரத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், சி.இ.ஓ., அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது. ஆனால், அந்த இடத்தில் அலுவலகங்கள் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தையடுத்து கட்டுமானப் பணிகள் முடங்கியது.
தற்போது வரை தற்காலிகமாக கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது.
மாவட்டம் துவங்கி 4 ஆண்டுகளாகியும் முக்கிய அலுவலகங்களாக விளங்கும் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டும் பணி எப்போதுதான் முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது.

