/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உள் வாங்கிய பாலத்தின் இணைப்பு சாலை சீரமைப்பு
/
உள் வாங்கிய பாலத்தின் இணைப்பு சாலை சீரமைப்பு
ADDED : மே 21, 2025 12:16 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே கெடிலம் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியது குறித்து சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவசரகதியில் அதிகாரிகள் சீரமைத்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த ஆளூர் - மொகலார் கிராமங்களுக்கு இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே 8.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.
கட்டுமானப் பணிகள் முடிந்து, இணைப்பு சாலைகள் போடப்பட்டுள்ளது. இருப்பினும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பாலத்தின் இணைப்பு சாலை திடீரென உள்வாங்கியது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து அவசர அவசரமாக பள்ளம் விழுந்த இடத்தில் ஜல்லியை நிரப்பி இயந்திரம் மூலம் சமன் செய்து சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.
சாலையை வலுவாக கட்டமைத்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.