/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சந்தேகப்படும்படி பண பரிவர்த்தனை நடந்தால் தெரிவியுங்கள்: வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
சந்தேகப்படும்படி பண பரிவர்த்தனை நடந்தால் தெரிவியுங்கள்: வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
சந்தேகப்படும்படி பண பரிவர்த்தனை நடந்தால் தெரிவியுங்கள்: வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
சந்தேகப்படும்படி பண பரிவர்த்தனை நடந்தால் தெரிவியுங்கள்: வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மார் 19, 2024 06:24 AM

கள்ளக்குறிச்சி: ஒரு வங்கி கணக்கில் இருந்து பல நபர்களின் வங்கி கணக்கிற்கு சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி வங்கி மேலாளர்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், அச்சகங்கள், நகை அடகுகடை மற்றும் பான் புரோக்கர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளர்கள் வெளியாட்களை கூட்டமாக தங்க அனுமதிக்கக் கூடாது. புதிதாக வந்து தங்குவோரின் முகவரி உள்ளிட்ட முழு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான கூட்டங்கள், நிகழ்ச்சிகள், விளம்பர பதாகைகள் வைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தேர்தல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும். ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளிலிருந்து 48 மணி நேரத்திற்கு முன் மண்டபம், விடுதி கூட்டரங்கில் தொகுதிக்கு தொடர்பு இல்லாத வெளியூர் ஆட்களை தங்க அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் தொடர்பான சுவரொட்டி, துண்டு பிரசுரம் அச்சடித்து வழங்கும் போது விநியோகம் செய்தவர், அச்சடித்தவர் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளும் அச்சக உரிமையாளர்கள் அச்சிடப்பட்ட தேதி, உறுதிமொழி வழங்கிய தேதி, எண்ணிக்கை, செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய உரிய படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.
நகைக்கடை உரிமையாளர்கள் நகை வைத்து அதிகளவில் கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். நகை வாங்குபவர்களுக்கு உரிய பில் வழங்கப்பட வேண்டும். கொள்முதல், விற்பனை, இருப்பு விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மொத்தமாக பணம் கொண்டு வந்து நகையை மீட்க வருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
வர்த்தக சங்க பிரதிநிதிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பில் வழங்க வேண்டும்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அரசியல் கட்சியினர், ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் வழங்கக் கூடாது. ஒரே நேரத்தில் அதிகளவு வாகனங்ளில் எரிபொருட்கள் நிரப்பினால் உரிய பில் வழங்கி, விபரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் வங்கி மேலாளர்கள், ஒரு வங்கி கணக்கில் இருந்து வழக்கத்திற்கு மாறாக ஒரு தொகுதியில் இருக்கும் பல நபர்களின் வங்கி கணக்கிற்கு சந்தேகத்திற்கு இடமான பண பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். தனி நபர்களின் வங்கி கணக்குகளின் மூலம் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பணம் பரிவர்த்தனை செய்தாலும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்ப எடுத்து செல்லும்போது உரிய பாதுகாப்புடன், கணக்குகளுடன் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

