/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய தடுப்பணைகள் கட்ட அரசுக்கு...கோரிக்கை; வீணாகும் உபரி நீர் சேமிக்கப்படுமா?
/
புதிய தடுப்பணைகள் கட்ட அரசுக்கு...கோரிக்கை; வீணாகும் உபரி நீர் சேமிக்கப்படுமா?
புதிய தடுப்பணைகள் கட்ட அரசுக்கு...கோரிக்கை; வீணாகும் உபரி நீர் சேமிக்கப்படுமா?
புதிய தடுப்பணைகள் கட்ட அரசுக்கு...கோரிக்கை; வீணாகும் உபரி நீர் சேமிக்கப்படுமா?
ADDED : ஜூலை 10, 2025 07:17 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய இரு ஆறுகளும் ஜீவாதாரமாக விளங்குகிறது.
கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் இவ்விரு ஆறுகளும் கடலூர் மாவட்டம் நல்லூர் அருகே ஒன்றாக இணைந்து விருத்தாச்சலம் வழியே சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றுடன் கலக்கிறது.
கச்சிராயபாளையம் அருகே கோமுகி ஆற்றிலும் சூளாங்குறிச்சி அருகே மணிமுக்தா ஆற்றிலும் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பயனடைகின்றன.
அதேபோல் கோமுகி ஆற்றில் தோப்பூர், சோமண்டார்குடி, மோ. வண்ணச்சூர், கள்ளக்குறிச்சி, நிறைமதி, விருகாவூர் ஆகிய இடங்களில் தடுப்பணை உள்ளது.
மணிமுத்தா ஆற்றில் சூ.பலப்பட்டு, வட பூண்டி, கண்டாச்சிமங்கலம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய எம்.எல்.ஏ., பிரபு முயற்சியால் கண்டாச்சிமங்கலம் அருகே ரூ.8.67 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணைகளில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் நீர் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்து அப்பகுதியில் நீர் வளம் பெருகி விவசாயத்திற்கு கை கொடுக்கிறது.
கனமழை காலத்தில் முழு கொள்ளளவை எட்டும்போது அணைகள் திறக்கப்படுகிறது.அதைத்தொடர்ந்து தடுப்பணைகள் நிரம்பி வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் ஆறுகளில் சாத்தியக்கூறுகள் உள்ள இடத்தில் புதிய தடுப்பணைகளை கட்டி நீரை தேக்கி அருகில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்க வழிவகை செய்ய முடியும்.
கோமுகி ஆற்றின் குறுக்கே வரஞ்சரம், மணிமுத்தா ஆற்றின் குறுக்கே வீரசோழபுரம், மயூரா ஆற்றின் குறுக்கே நயினார்பாளையம் ஆகிய ஊர்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த 2023 ம் ஆண்டு சட்டசபையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மணிமுத்தா ஆற்றில் சோழம்பட்டு அருகே புதிய தடுப்பணை கட்டப்படும் என கடந்த ஜன., மாதம் சட்டசபையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
ஆனாலும் மேலும் பல இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய மழைநீர் வீணாக கடலில் சென்று கலந்தது.
சாத்தியக்கூறுகள் உள்ள இடத்தில் ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணைகளை கட்ட அரசு உத்தரவிட வேண்டும். தடுப்பணைகள் மூலம் நீரை சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மாவட்டத்தில் விவசாயம் செழித்து உணவு தானிய உற்பத்தி பெருகும்.
கோமுகி, மணிமுக்தா ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்ட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.