திருக்கோவிலுார் பெரிய ஏரியை புனரமைக்க கோரிக்கை:படகு குழாம் அமைத்தால் வருவாய் கிடைக்கும்
திருக்கோவிலுார் பெரிய ஏரியை புனரமைக்க கோரிக்கை:படகு குழாம் அமைத்தால் வருவாய் கிடைக்கும்
UPDATED : ஜூலை 15, 2026 03:51 PM
ADDED : ஜூலை 15, 2026 03:40 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெரிய ஏரியை சீரமைத்து, படகு குழாம் வசதியுடன், நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் பெரிய ஏரி, 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 800 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் கச்சிக்குச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் உட்பட 7க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி 3,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
தென்பெண்ணையில் சிறிதளவு தண்ணீர் வந்தால் கூட ஆற்று வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வந்து, ஏரி எப்போதும் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிக்கான ஆற்று வாய்க்கால் முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி ஏழு கிலோ மீட்டர் வரை பயணிக்கிறது.
பெஞ்சல் புயல் வெள்ளத்தில் ஆற்று வாய்க்காலின் தடுப்புச் சுவர் உடைந்து, மணல் நிரம்பி வாய்க்கால் துார்ந்து போனது. இதனை சமீபத்தில் ஜே.சி.பி., மூலம் அகற்றினர். என்றாலும் ஆற்றில் தண்ணீர் வந்தால் ஏரிக்கு முழுதுமாக வராது. காரணம், ஏரி வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஆற்றில் இருந்த தடுப்பு சுவர் உடைந்து விட்டது.
இதனை சீரமைத்து முழு கொள்ளளவு தண்ணீரும் ஏரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க, திருக்கோவிலுார் நகரின் அருகாமையில் இருக்கும் ஏரியில் நீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கடுமையான வறட்சி காலங்களில் கூட நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியின் தற்போதைய நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஏரியை சுற்றி மீன் கடைகள், மாடு வதைக்கும் கூடங்கள், கருவேல மரங்களுடன் புதர் மண்டி கிடக்கிறது.
சந்தப்பேட்டையின் கழிவு நீர் முழுதும் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி மாசடைந்து விவசாயத்திற்கு பயனற்று விடுமோ என்ற பயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள், வீரட்டானேஸ்வரர் கோவில், ரகோத்தமர் மூல பிருந்தாவனம், ஞானானந்தர் தபோவனம் என கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கும், பொழுது போக்குவதற்கும் வசதி இல்லை.
இக்குறையை போக்க ஏரியை துார்வாரி கரைகளை பலப்படுத்தி, திருக்கோவிலுார் - சந்தப்பேட்டை இடையே உள்ள சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்து, படகு குழாம் அமைத்து, ஆண்டு முழுதும் நீர் நிறைந்திருக்கும் வகையில், ஆற்று வாய்க்காலை புதுப்பிப்பதன் மூலம் ஏரியில் எந்த காலத்திலும் நீர் நிரம்பி சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும், நகர வாசிகளையும் மகிழ்விக்கும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக உருவாக்க முடியும்.
இதன் மூலம் ஏரி மாசடைவது தடுக்கப்படும் விவசாயத்திற்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இக்கோரிக்கையை அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுமே மக்களின் இந்த கருத்திற்கு செவி சாய்க்கும் வகையில் வாக்குறுதிகளை அளித்து இருந்தனர். எனவே திருக்கோவிலுார் பெரிய ஏரியை சீரமைத்து ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி இருக்க ஏதுவாக ஆற்று வாய்க்காலையும் புனரமைத்து பொழுதுபோக்கு பூங்காவாக உருவாக்க பொதுப்பணித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நகர வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
