அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு நிர்வாகம்...கோரிக்கை: போலீஸ் பாதுகாப்பு உதவி மையம் அமைக்கப்படுமா?
அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு நிர்வாகம்...கோரிக்கை: போலீஸ் பாதுகாப்பு உதவி மையம் அமைக்கப்படுமா?
UPDATED : செப் 04, 2026 05:25 AM
ADDED : செப் 03, 2026 05:12 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் கூடிய போலீஸ் பாதுகாப்பு உதவி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்தவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது.
அதன்பின் கச்சிராயபாளையம் சாலையில் இருந்த பழைய அரசு மருத்துவமனை கட்டடம் முழுதும் மருத்துவக் கல்லுாரியின் மகப்பேறு பிரிவாக மாற்றப்பட்டது. இங்கு பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
பழைய அரசு மருத்துவமனையில் இருந்த போலீஸ் பாதுகாப்பு உதவி மையம், சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதனால் தற்போது அக்கட்டடம் பயன்பாடியின்றி உள்ளது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு தங்குகின்றனர்.
கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மகப்பேறு பிரிவுக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை, சின்னசேலம், உளுந்துார்பேட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவசத்திற்காகவும், பல்வேறு சிகிச்சைக்காகவும் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இதனால் மகப்பேறு மருத்துவமனை பிரிவில் எப்போது பார்த்தாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்நிலையில், பிரசவத்திற்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளைப் பார்ப்பதற்கும், பிரசவத்திற்கு பின் குழந்தைகளை பார்ப்பதற்கு குடும்பத்தினர், உறவினர்கள் பலர் வந்து செல்கின்றனர். பிரசவத்திற்கு அனுமதிக்கும் கர்ப்பிணிகளின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்குகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்குள் அனுமதிப்பது, வாகனங்கள் அனுமதிப்பது, சிகிச்சை முறையில் குறைபாடு என பல்வேறு காரணங்களால் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் குடும்பத்தினருக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் இடையே அவ்வப்போது தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுகிறது.
சில தினங்களுக்கு முன் மகப்பேறு மருத்துவமனை பிரிவில் ஏற்பட்ட பிரச்னை கைகலப்பில் முடிந்து சாலை மறியல் போராட்டம் வரை சென்றது. தொடர்ந்து இரு தரப்பிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மகப்பேறு மருத்துவமனை பிரிவில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போலீஸ் பாதுகாப்பு உதவி மையம் அமைக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அவ்வாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பட்சத்தில் பெரும்பாலான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அரசு மருத்துவக் கல்லுாரி மகப்பேறு மருத்துவமனை பிரிவில் போலீஸ் பாதுகாப்பு உதவி மையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
