மாவட்டத்தில் உள்ள ஆறுகளை துார்வார விவசாயிகள் கோரிக்கை: ஓடைகளாக மாறுவதற்கு முன் நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் உள்ள ஆறுகளை துார்வார விவசாயிகள் கோரிக்கை: ஓடைகளாக மாறுவதற்கு முன் நடவடிக்கை அவசியம்
UPDATED : செப் 17, 2026 04:29 PM
ADDED : செப் 17, 2026 04:21 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கோமுகி, மணிமுக்தா ஆறுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் உள்ளது. ஆண்டுதோறும் அக்., - நவ., மாதங்களில் பருவ மழை காலங்களில் இரு அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இரு அணைகளையும் நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பருவ மழை காலங்களில் அணை நிரம்பியதும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் போது , பாதுகாப்பு கருதி ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கும். அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது கோமுகி, மணிமுக்தா ஆற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடும். ஒவ்வொரு தடுப்பணையில் இருந்தும் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏரிகள் நிரம்புகின்றன. தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து கிணற்று நீர் பாசனத்திற்கும் வழிவகைகள் ஏற்படுகின்றன. பருவ மழை காலங்களில் ஆண்டுதோறும் இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இரு ஆறுகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் ஆறுகளின் நடுவே அதிகளவிலான மரங்கள், செடி கொடிகள் பெரிய அளவில் வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள், கட்டிட இடிபாடுகள் போன்றவற்றினால் ஆற்றின் அகலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
வரும் காலங்களில் ஆறுகள் ஓடையாகவும், கால்வாயாகவும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆற்றில் பெரும்பாலான இடங்களில் மணல் மேடுகள் இன்று மரம், செடிகள் மட்டுமே வளர்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகளும் பலவீனமாகவும் இருக்கிறது. பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாதபோது, அணையில் இருந்து குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படும். அத்தருணத்தில் ஆற்றில் தண்ணீர் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் ஆற்று பகுதிகளை ஓட்டியுள்ள விவசாய நில பரப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து விடுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இரு ஆறுகளிலும் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே, ஆற்றின் உட்புறத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, இரு கரைகளையும் பலப்படுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
