/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் தொகுதி உடன் பிறப்புகள் 'குஷி'
/
ரிஷிவந்தியம் தொகுதி உடன் பிறப்புகள் 'குஷி'
ADDED : ஆக 04, 2025 11:29 PM
ச ட்டசபை தேர்தல் இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை பிரதான கட்சிகள் துவங்கியுள்ளன. தே.மு.தி.க., விற்கு ராஜ்யசபா 'சீட்' வழங்காததால், அ.தி.மு.க., வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் தே.மு.தி.க., மவுனமாக உள்ளது.
மேலும், வரும் தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., அங்கம் வகிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவ்வாறு நடந்தால், விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், விருதுநகர், திருக்கோவிலுார் உட்பட சில சட்டசபை தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கக்கோரி தே.மு.தி.க., வலியுறுத்தும்.
அதிலும், கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தே.மு.தி.க., விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். இதனால் வரும் தேர்தலில் அவரது மனைவி பிரேமலதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடலாம் என கருதப்பட்டது. இதனால், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வினர் கலக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில், வேப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா மகன் விஜயபிரபாகரன், எந்த கூட்டணியாக இருந்தாலும் 2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டியிடுவார் என சூசகமாக அறிவித்தார். இதனால், 'ரூட் கிளியர்' என ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வினர் நிம்மதியடைந்தனர்.
தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், ஏற்கனவே கட்சி நிர்வாகிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பைக்குகளை பரிசாக கொடுத்தார். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளை குஷிப்படுத்த சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலுார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பஸ் மூலம் கேரள மாநிலம், மூணாறுக்கு சென்று 2 நாட்கள் தங்கியுள்ளனர்.

