/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.9.1 கோடி: கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி...
/
ரூ.9.1 கோடி: கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி...
ரூ.9.1 கோடி: கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி...
ரூ.9.1 கோடி: கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி...
ADDED : ஜூலை 28, 2025 02:15 AM

கச்சிராயபாளையம்,: கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு அனுப்பிய, 3,314 விவசாயிகளின் வங்கி கணக்கில், 9.1 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக செலுத்தப்பட்டது. கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு 4வது இடம் வகிக்கிறது. தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுதும் 3.13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும், அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 52.8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி நடக்கிறது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் 16 சர்க்கரை ஆலைகளும், பொதுத்துறையில் 3 ஆலைகளும், தனியார் ஆலைகள் 27 என மொத்தம் 46 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 1 தனியார் ஆலை இயங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து சர்க்கரை ஆலைகள் அதிகம் கொண்ட மாவட்டமாகவும் கள்ளக்குறிச்சி திகழ்கிறது.
கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு அதிக அளவில் பயிரிடுகின்றனர். இங்கு அறுவடை செய்யும் கரும்புகள் மூங்கில்துறைப்பட்டு மற்றும் சேத்தியாதோப்பு ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 1997ம் ஆண்டு கச்சிராயபாளையத்தில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கப்பட்டது. இந்த ஆலை நாள் தோறும் 2500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டது.
கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்தி திறன், சர்க்கரை கட்டுமானம் மற்றும் தொழில் நுட்பங்களில் சிறந்து விளங்குவதால் இந்த ஆலை தேசிய அளவில் 40 விருதுகளும், மாநில அளவில் 36 விருதுகள் பெற்றுள்ளது. சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் தாலுக்கா கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த ஆலையில் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆலை அங்கத்தினருக்கு தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக 14 சதவீதம் லாப பங்கீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கச்சிராயபாளையம், வடக்கனந்தல், கரடிசித்துார், கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு, மூரார்பாளையம், சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட 8 இடங்களில் கரும்பு கோட்ட அலுவலகங்கள் உள்ளன. ஆலையில் முதன்மை அரவை பருவம் மற்றும் சிறப்பு அரவை என இரண்டு பிரிவுகளாக கரும்பு அரவை செய்யப்படுகிறது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை முதன்மை அரவை பருவமும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சிறப்பு அரவை பருவமும் நடக்கிறது.
ஆலையில் கடந்த 2024 - 25ம் ஆண்டு முதன்மை அரவை பருவத்தில் 2 லட்சத்தி 58 ஆயிரத்தி 329 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இதில் கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுபுற பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்தி 314 விவசாயிகள் அரவைக்கு கரும்பு வழங்கினர்.
இந்த ஆண்டு சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன்னுக்கு ரூ. 349 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 9 கோடியே 1 லட்சத்து 56 ஆயிரத்தி 704 ரூபாய், கரும்பு அனுப்பிய விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல் ஆட்சியர் யோகவிஷ்ணு அறிவித்துள்ளார். இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.