/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி வாய்க்கால் சீரமைக்காததால் சம்பா பயிர் கருகும் அபாயம்
/
ஏரி வாய்க்கால் சீரமைக்காததால் சம்பா பயிர் கருகும் அபாயம்
ஏரி வாய்க்கால் சீரமைக்காததால் சம்பா பயிர் கருகும் அபாயம்
ஏரி வாய்க்கால் சீரமைக்காததால் சம்பா பயிர் கருகும் அபாயம்
ADDED : பிப் 03, 2025 10:46 PM

திருக்கோவிலுார்; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட திருக்கோவிலூர் ஏரி வாய்க்காலை சீரமைக்காததால் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் பெரிய ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.
மேலும், ஏரி உபரி நீர் கச்சிகுச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் என 7க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிக்கு, ஆற்று வாய்க்கால் முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி, 7 கி.மீ., துாரம் பயணிக்கிறது.
மழைக்காலங்களில் தகடி பகுதியில் இருந்து உருவாகி வரும் ஓடை நீரும் திருக்கோவிலுார் வாய்க்காலில் கலக்கும்.
சமீபத்தில் தென்பெண்ணையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில், ஆற்றை ஒட்டிய ஏரி வாய்க்காலில் 3 கி.மீ., துாரத்திற்கு மணல் முடியது.
ஆற்றில் இருந்த தடுப்பு கருங்கல் கல்வெட்டுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
இதன் காரணமாக திருக்கோவிலுார் ஏரிக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. ரூ. 2 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வாய்க்காலை சரி செய்ய முடியும்.
எனினும் நீர்வளத்துறை இந்த பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதன் காரணமாக சமீபத்தில் புயல் வெல்ல பாதிப்பு குறித்து மத்திய, மாநில அதிகாரிகள் மேற்கொண்ட சுற்று பயணத்தில் இந்த பாதிப்பை குழுவினர் பார்வையிடவில்லை.
வெள்ள பாதிப்பு பட்டியலில் இதுவரை இந்த வாய்க்காலை நீர்வளத் துறை சேர்க்காதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. .
தற்பொழுது ஆற்றில் சீராக தண்ணீரில் சென்று கொண்டிருந்தாலும், ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.
இதன் காரணமாக ஏரியில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஏரி தண்ணீரை நம்பி பயிர் செய்துள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே தண்ணீர் பாய்ச்ச முடியும் அதன்பிறகு கருகத் துவங்கிவிடும்.
எதிர்வரும் மார்ச் மாதம் சாத்தனுார் அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில், அந்தத் தண்ணீரையாவது ஏரிக்கு கொண்டு வரும் வகையில், ஆற்றுவாய்க்காலை ஏதாவது ஒரு திட்டத்தில் சேர்த்து சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

